16 தமிழக  சட்டமன்றத்திற்கான எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்ற கேள்வியில் அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளருக்கும் - இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 


2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். 


அதேபோன்று, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  75 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை சந்தித்தது. இதில், அதிகபட்சமாக அஇஅதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றது.


இந்நிலையில், சட்டப்பேரவையில் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவெடுக்க அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை இன்று மாலை, 4:30 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. 


முன்னதாக, அஇஅதிமுக, செய்தி தொடர்பாளர் புகழேந்தி, 'அரசியலில் அனுபவம் மிக்கவர் என்பதால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, ஓ.பி.எஸ்., தேர்வாக வாய்ப்புள்ளது' என ஊடகங்ளில்  தெரிவித்தார். 


இருப்பினும், எடப்பாடி பழனிசாமியை முன்வைத்துத் தான் அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. மாநிலம் முழுவதும் 39.7% வாக்குகளையும், கொங்கு மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளையும் கைப்பற்றியதில் பெரும் பங்கு எடப்பாடி பழனிசாமிக்கு உரியது. எனவே, அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க  வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 



 


சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இபிஎஸ்- ஒபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


எவ்வாறாயினும், கடந்தாண்டு அக்டோபர் மாதம், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். கட்சியில் இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்


எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற தனிமனித ஆளுமையை சுற்றி கட்டமைக்கப்பட்ட  அதிமுக- வுக்கு இரட்டை தலைமை முதலில் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.  மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக, பாமக போன்ற கூட்டணிக் கட்சிகள் கூட கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தாமதம் காட்டினர்.  வடதமிழகத்தில் வன்னியர்கள் உள்ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை முதல்வர் எடப்பாடிபழனிசாமி சட்டபேரவையின் கடைசி நாளன்று அறிவித்தார்.  ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பாரா?, கூட்டணிக் கட்சியை திருப்திப்படுத்த வேண்டி உள்ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டிருப்பாரா? போன்ற பல கேள்விகள் அதிமுகவின்  இரட்டைத் தலைமையை நோக்கி எழுப்பப்படுகின்றன. ஜெயலலிதா வன்னியர் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானவர் இல்லையென்றாலும், அரசியல் அழுத்தங்களுக்காக கடைசி நேரத்தில் அறிவித்திருக்க மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.        


      


மேலும், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், மோகன், கோபால கிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர்  கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் குழுவிலும், அதிகமானோர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 


இந்நிலையில் தற்போது அதிமுகவின் எதிர்கட்சி தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விடை கிடைக்கலாம்.