தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது 69ஆவது பிறந்தநாளை மார்ச் 1ஆம் தேதி கொண்டாடினார். அன்று, உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக 'நான் முதல்வன்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 


'உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற குறிக்கோளைக் கொண்ட திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்தத் திட்டம் என்னுடைய கனவுத் திட்டம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். 


'நான் முதல்வன்' திட்டம் உண்மையிலேயே என்ன திட்டம்? இது எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது? இதனால் மாணவர்களுக்கு என்ன பயன்? விரிவாகப் பார்க்கலாம்.


மாணவர்களுக்கு குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பிற தகவல்களும் உண்டு. இதற்காக https://naanmudhalvan.tnschools.gov.in/home என்ற இணையதளப் பக்கத்தில் பல்வேறு பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித் தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் விரிவாக உள்ளன. அவற்றை விரிவாகப் பார்க்கலாம். 




என்ன படிக்கலாம்? 


12ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? என்று இந்தப் பகுதியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில், பி.எஸ்.சி. தொடங்கி பி.டெக்.,  எம்.பி.பி.எஸ். வரை ஏராளமான படிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்பு குறித்த சுருக்கமான அறிமுகம், படிப்புக் காலம், அதிலேயே என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன? அந்தப் படிப்பு அளிக்கும் பணி வாய்ப்புகள் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நுழைவுத் தேர்வுகள் 


நுழைவுத் தேர்வுகள் குறித்த பகுதியில் கீழ்க்காணும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கொடுக்கப்பட்டுள்ளன. 


* பள்ளிப் படிப்புக்குப் பிறகு என்னென்ன நுழைவுத் தேர்வுகள் உள்ளன? 
* நுழைவுத் தேர்வு குறித்த அறிமுகம்
* அதை எழுதுவதற்கு என்ன கல்வித் தகுதி தேவை? 
* தேர்வு முறை எப்படி இருக்கும்
* சேர்க்கைக்கான காலி இடங்கள்
* விண்ணப்பக் கட்டணம்
* விண்ணப்பிக்கும் முறை 


மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், ஐஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ உள்ளிட்ட 11 வகையான நுழைவுத் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. 




உதவித் தொகை


கல்லூரிப் படிப்பைத் தொடங்கும் மாணவர்களுக்கான உதவித் தொகைகள் குறித்த விவரங்களும் ’நான் முதல்வன்’ பகுதியில் உள்ளன.  


குறிப்பாக பட்டியலின / பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்தியத் தொகுப்பு திட்ட  உதவித் தொகை, சிறுபான்மையினருக்கான உதவித் தொகை, ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கும் உதவித் தொகை, தேசிய உயர் கணித வாரிய (NBHM) உதவித் தொகை, கிஷோர் வைக்யானிக் ப்ரோசாஹன் யோஜனா (KVPY), ஒரே பெண் குழந்தைக்கான இந்திரா காந்தி கல்வி உதவித்தொகை, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை உதவித் தொகை,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவித் தொகை, பட்டியலின / பழங்குடி மாணவர்களுக்கான முனைவர் உதவித்தொகை, 10ஆம் வகுப்புக்கு மேல் கற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆகியவை குறித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


உதவித் தொகைகள் குறித்த சுருக்கமான அறிமுகம், உதவித் தொகைக்கான தகுதி, விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. 


கல்விக் கடன்


மாணவர்கள் தடையின்றிக் கல்வி கற்க எங்கு கடன் வழங்கப்படுகிறது என்ற விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசின் வித்யா லட்சுமி இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் எளிதாகக் கல்விக் கடன் பெற முடியும். இதில், இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் மூன்று படிநிலைகளில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்த முறைமையில் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த விளக்கங்கள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. 




வேலைவாய்ப்பு


மாணவர்கள் படித்து முடித்தபிறகு என்னென்ன வேலைகள் உள்ளன என்பது குறித்து இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். அவ்வாறு 90-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இந்தப் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எல்லாவிதமான வேலைகள் குறித்த சுருக்கமான அறிமுகம், அதற்குத் தேவையான கல்வித் தகுதி, என்னென்ன திறன்கள் தேவை, பணிசார் முன்னேற்றங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் உள்ளன. 


இந்த விவரங்கள் அனைத்தும் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் உள்ளன. என்னென்ன கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கலாம் என்ற விவரங்கள் விரைவில் பதிவேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


*


இவைதவிர மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முகத் தேர்வுக்கு தயாராகவும் பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.


உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.




முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.


கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய, அவரவர் விருப்பத்திற்கேற்ப வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள 'நான் முதல்வன்' திட்டம், வழிகாட்ட அதிகம் ஆளில்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அரிய பொக்கிஷம். இத்திட்டத்தை இன்னும் கூடுதல் தகவல்களுடன் கிராமங்களுக்கும் எளிமையாகக் கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. 


நான் முதல்வன் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு: https://naanmudhalvan.tnschools.gov.in