வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் எனப்படும் மின்னணு ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டி தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 


இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே இந்தியாவில் நடத்தப்படும் தேர்தலில் தற்போது இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் விவிபேட் எனப்படும் மின்னணு திரை இயந்திரம் இணைக்கப்பட்டிருக்கும்.


நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது இந்த விவிபேட் இயந்திர திரையில் 7 நொடி தோன்றும். இதன்மூலம் நம்முடைய வாக்கு சரியான வேட்பாளர்களுக்கு சென்றுள்ளதா என்பதை காணலாம். இதனை மின்னணு ஒப்புகைச் சீட்டு என குறிப்பிடுவர்.கடந்த 2013 ஆம் ஆண்டு விவிபேட் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகள் தொகுதிக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே எண்ணப்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் எண்ண வேண்டும் என பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 


அதேபோல் விவிபேட் இயந்திரத்தில் ஒளிபுகா கண்ணாடியை வைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது. இந்த வழக்கானது கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்து, பின்னர் 18 ஆம் தேதியும் தொடர் விசாரணை நடைபெற்றது. அப்போது வாக்குப்பதிவுக்குப் பின் விவிபேட் இயந்திரங்களை முழுமையாக ஆய்வு செய்வதால் வெளிப்படை தன்மையை அதிகரிக்க முடியும். எனவே 100 சதவிகிதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர். 


இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் ஆஜராகி வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விளக்கமளித்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 


முன்னதாக காலையில் வழக்கு விசாரணையின்போது விவிபேட் இயந்திரத்தில் தங்களுக்கு சில சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் விவிபேட் இயந்திரத்தில் மைக்ரோ கண்ட்ரோலர் கருவி உள்ளதா?, இந்த கருவி மின்னணு இயந்திரம் அல்லது விவிபேட் இயந்திரத்தில் உள்ளதா?, இதில் ஒருமுறை மட்டும் தான் மென்பொருளை பதிவேற்றம் செய்ய முடியுமா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.