திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகளின் விவரம்:
1. மதுரை
2. திண்டுக்கல்
தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “
திமுக உடனான நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இன்று எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து முடிவெடுத்தோம். அதன்படி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் திண்டுக்கலில் போட்டியிடுகிறது. நிச்சயமாக இந்த இரண்டு தொகுதிகளில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என மகிழ்ச்சியோடு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்” என தெரிவித்தார்.
அதேபோல் நாகை மற்றும் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப்பட்டது.
தொகுதிகளின் விவரம்:
1. நாகப்பட்டினம்
2. திருப்பூர்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் நிலையில், மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசனும், திண்டுக்கல்லில் பெ.சண்முகம் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து, மீண்டும் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் நிலையில், திருப்பூர் தொகுதியில் மீண்டும் சுப்பராயன், நாகப்பட்டினம் தொகுதியில் 4 முறை எம்பியாக இருந்த செல்வராசுவுக்குப் பதிலாக வேறு வேட்பாளர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.