சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் திரண்டு கண்டபோது சாலையில் பிறந்த குழந்தை வீசப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் சாலையில் வீசப்பட்ட குழந்தையை மீட்டு கஸ்தூரிபாய் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த குழந்தையை வீசி சென்ற தாய் அருகில் இருக்கும் விடுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த குழந்தையை பெற்றெடுத்தது 17 வயது சிறுமி என்றும் தெரியவந்துள்ளது. அந்த சிறுமியின் பெற்றோர் கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள். இவர்களின் சொந்த ஊர் மதுரை. மதுரையில் இருந்த போது அந்த சிறுமிக்கும் அங்கு இருக்கும் ஏற்கெனவே திருமணமான வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகவே 17 வயது சிறுமி கருவுற்று இருக்கிறார்.


இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி நிறைமாதமாக இருந்த சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பின் சத்தமில்லாமல் அந்த குழந்தையை அருகில் இருக்கும் தெருவில் வீசிச் சென்றுள்ளனர்.


திருவல்லிக்கேணி போலீசார் சிறுமியையும் குழந்தையையும் மீட்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் மதுரையில் வசித்து வந்துள்ளார். வாலிபர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.