தேர்தலில் மாமியார்-மருமகள் , தாய்-மகள், அப்பா-மகன் , அண்ணன்-தம்பி போட்டியிடுவதெல்லாம் பெரிய விசயமா? அதெல்லாம் காலம் காலமாகவா நடந்து கொண்டிருக்கும் விசயம் தான். ஆனால், அவையெல்லாம் அவர்களின் விருப்பத்தின் பேரில் தான் அமைந்த போட்டியாகும். ஆனால், ஸ்ரீபெரும்பதூரில் விருப்பமே இல்லாமல், மாமியாரும், மருமகளும் நேரடியாக போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுவும் ‛காலத்தின்’ கோலத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் இறுதி வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். ஆனால், 1வது வார்டில் மட்டும் ஒரு சுயேட்சை வேட்பாளர், எனக்கு ஓட்டு போடாதீங்க என கேட்டுக் கொண்டிருக்கிறார், 1வது வார்டு பக்தவச்சலம் நகரைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர், அந்த வார்டில் போட்டியிட சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார்.




அனைவரை போல, அவரும், தனக்கு மாற்று வேட்பாளராக தனது மருமகள் புனிதவள்ளியை மனுத்தாக்கல் செய்ய வைத்திருந்தார். ஒருவேளை தனது மனு நிராகரிக்கப்பட்டால், தனது மருமகள் மனு ஏற்கப்படும் என்பதால் இந்த ஏற்பாடு. இது அனைவரும் செய்யும் வழக்கமான ஏற்பாடு தான். ஆனால், இருவரும் மனுவும் சரியாக இருந்ததால், பரிசீலனையின் போது அவை இரண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இப்போது, மருமகள் புனிதவள்ளி தனது மனுவை வாபஸ் பெற வேண்டும். கடந்த திங்களன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள். அன்றைய தினம் வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்த புனித வள்ளி, காலையிலிருந்து மாலை வரை இருந்த நேரத்தையெல்லாம் விட்டு விட்டு, வீட்டில் சமைத்து முடித்து விட்டு மாலை 4 மணிக்கு மேல் உதவி தேர்தல் அலுவலரின் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால், நேரம் முடிந்ததை அவர் அறியவில்லை. அதை காரணமாக கூறி, அதிகாரிகள் வேட்புமனு வாபஸ் பெற முடியாது, நீங்கள் போட்டியிட்டு தான் ஆக வேண்டும் என தெரிவித்தனர். 




இதனால் அதிர்ச்சி அடைந்த புனிதவள்ளி, வீட்டில் வந்து விபரத்தை கூறியுள்ளார். குடும்பத்தாருக்கும் ஒரே அதிர்ச்சி. இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் குழம்பிவிட்டனர். மாமியருக்கு ஒரு சின்னம், மருமகளுக்கு ஒரு சின்னம் என தேர்தல் அலுவலர் சின்னத்தையும் ஒதுக்கிவிட்டார். இனி வேறு வழியே இல்லை. மாமியார் தான் பிரதான வேட்பாளர், எனவே தனக்கு யாரும் ஓட்டு போட்டுவிட வேண்டாம் என பிரச்சாரம் செய்யும் புனிதவள்ளி, தனது மாமியாருக்கு ஓட்டளிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறார். 


மாமியாருக்கு அதிக ஓட்டு விழுகிறதா... மருமகளுக்கு அதிக ஓட்டு விழுகிறதா... என்று முடிவுக்காக காத்திருக்கிறது அந்த வார்டு. நாமும் காத்திருப்போம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண