நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள சிவகாசி மாநகராட்சி, முதல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. வேட்டுமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்க 48 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், திருத்தங்கள் திமுக நகர பொறுப்பாளர் உதயசூரியன் தலைமையில் அங்கு வந்த திமுகவினரை போலீசார், கூட்டமாக அனுமதிக்க மறுத்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளரிடம் திமுக பொறுப்பாளர் உதயசூரியன் தகராறில் ஈடுபட்டார். ‛அதிமுகவினரை அதிகம் உள்ளே அனுப்பிவிட்டதாகவும்... திமுகவினரை மட்டும் அனுமதிக்கவில்லை...’ என்றும் குற்றம்சாட்டினார். அதற்கு அந்த ஆய்வாளர், ‛விதிகளின் படி மட்டுமே ஆட்களை உள்ளே அனுப்புவதாக’ கூறினார்.
இதனால் திமுக பொறுப்பாளருக்கும் -போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தனது ஆதரவாளர்களுடன் திமுக பொறுப்பாளர் நகர ஆரம்பிக்கும் போது, போலீசார் கெஞ்சிக் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக பொறுப்பாளர் உதயசூரியன், போலீஸ் ஆய்வாளர் மீது இருந்த கோபத்தை, அவரை நோக்கி கையை ஓங்கி, அவர் அருகில் இருந்தவர் மீது சரமாறியாக தாக்கினார். அடிவாங்கியது வேறு யாரும் இல்லை... அதே மாநகராட்சிக்கு 20 வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் கணவர் கருப்பசாமி தான், அந்த அடி வாங்கியது.
கருப்பசாமி மீது விழுந்த அடியை கண்டு அதிர்ந்து போன போலீசார், அதன் பிறகு ஒதுங்கிக் கொண்டனர். இருப்பினும் அவர்கள் திமுகவினரை கெஞ்ச, அதை அவர்கள் சட்டை செய்யாமல் உள்ளே சென்றனர். போலீஸ் முன்னிலையில் , எதற்கு அடி வாங்குகிறோம் என்று தெரியாமல், பளார் பளார் என்று அடி வாங்கி வேட்பாளரின் கணவர், ‛என்னை எதுக்குங்க அடிச்சிங்க...’ என்பதைப் போல, அவரும் நகர்ந்தார்.
இதோ அந்த வாக்குவாத வீடியோ...
தேர்தல் அறிவிப்பு விபரம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி முதல் வரும் பிப்ரவரி 4ம் தேதி வெள்ளிக்கிழமை வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு ,மனுத்தாக்கல் நடைபெற்றது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 7ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அதைத்தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் மார்ச் 2ம் தேதி நடைபெறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்