இந்த தேர்தல் எடுப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் இடையேயான தேர்தல் என ஆரணி திமுக வேட்பாளர் தரணிவேந்தன் ஆதரித்து கூட்டேரிப்பட்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 


ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து மயிலம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:


பாஜகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரு அணிலும். அதிமுகவும், தேமுதிகவும் ஒரு அணியிலும் வந்து வாக்கு கேட்கிறார்கள். என்ன சொல்லி வாக்கு கேட்க வேண்டும். பாஜக, அதிமுகவால் தாங்கள் என்ன செய்தோம் என சொல்லி வாக்கு கேட்க முடியுமா. எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அமெரிக்காவுக்கு இணையாக பொருளாதாரத்தை கொண்டு செல்வேன் என மோடி கூறினார். ஆனால் நம் ஒவ்வொரு தலையிலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளார்.


 


தமிழ்நாட்டின் உரிமைகளான உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி ஆகியவற்றை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்டார். தமிழகத்தின் உரிமையை பறித்தவர் மோடி, தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுக்க உடந்தையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தியாவில் 50 கோடிக்கு மேல் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர்.


கடந்த பத்தாண்டு மோடி ஆட்சியில் இவர்களின் சராசரி வருமானம் 176 ரூபாய். மோடி ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு கிடையாது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தொழிலாளர்களின சராசரி வருமானம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் தொழிலாளர்களுல்கு பணி பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு ஆகியவற்றிற்கு சட்ட திருத்தம் கொண்டு வருவோம் என கூறியுள்ளார். மோடியும் எடப்பாடியும் கூறுவது பொய்யான வாக்குறுதிகள். விவசாய கடன்கள் ரத்து செய்யாத மோடி, அதானி, அம்பானி உள்ளிடட தொழிலதிபர்களுக்கு 14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார் மோடி. மோடி ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை, முதலாளிகளுக்கான ஆட்சி.


இந்த தேர்தல் என்பது எடுப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் இடையேயான தேர்தல். மக்களிடமிருந்து எடுப்பவர் மோடி, கொடுப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் ஆன தேர்தல். ஜனநாயகம் இருந்தால் தான் நாட்டில் எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும் என பேசினார்.