Baba Ramdev SC: தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில், நீங்கள் ஒன்னும் அப்பாவி கிடையாது என, உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ்:


பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் தொடர்பாக போலியான தகவல்களுடன் விளம்பரம் செய்ததாக, அதன் நிறுவனர் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான, மன்னிப்பு பிராமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கு முன்பாகவே, பாபா ராம்தேவ் பொதுவெளியில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளிக்க பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி எம்டி பாலகிருஷ்ணா உள்ளிட்டோர்,  இன்று ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு ஆஜராகினர்.


பாபா ராம்தேவ் விளக்கம்:


அப்போது பாபா ராம்தேவ் தரப்பில் வழங்கப்பட்ட விளக்கத்தில், “தவறான விளம்பரங்கள் குறித்து பகிரங்க மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும், தவறு என கூறப்படும் எங்களது செயல்பாடுகள் அனைத்தும் உற்சாக மிகுதியால் நடைபெற்றது. எந்த வகையிலும் நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. எனது கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் கூறப்படும் அனைத்து உரிமைகோரல்களும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டது. 


நீங்கள் அப்பாவி கிடையாது - உச்சநீதிமன்றம்:


பாபா ராம்தேவின் விளக்கம் தொடர்பாக பேசிய நீதிபதிகள், “இது முற்றிலும் கவனக்குறைவான செயல்பாடாகும். சட்டம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும். ஒரு குறிப்பிட்ட நோயை ஆயுர்வேதம் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று எப்படி கூறுகிறீர்கள்? இதுபோன்ற அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதிமொழி எடுக்கப்பட்ட உடனேயே மற்ற மருத்துவ முறைகளை பொதுவெளியில் எப்படி இழிவுபடுத்த முடியும்?” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராம்தேவ், எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன். அந்த தவறுகள் உற்சாகத்தில் நடந்தது, இனி நடக்காது" என்று உறுதியளித்தார். அதுகுறித்து பேசிய நீதிபதிகள், ”உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் அல்லது உங்கள் கடந்த காலத்தை புறக்கணிப்போம் என்று நாங்கள் கூறவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை மீறியுள்ளீர்கள், அதனால் நீங்கள் அப்பாவியும் இல்லை” என சாடினர்.


அலோபதி பற்றிய விமர்சனம்:


அலோபதி மருத்துவம் "போலி அறிவியல்" என்று அழைக்கப்படுகிறது என்றும், அலோபதி மற்றும் ஆயுர்வேதம் ஆக்ய இரண்டு பிரிவுகளுக்கு இடையே எப்போதும் மோதல் இருந்து வருவதாகவும் ராம்தேவ் பேசியிருந்தார். விக்கிப்பீடியாவிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாகவும் ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவை நீதிபதிகள் சாடினர். ராம்தேவ் இது போன்ற விஷயங்களில் தலையிடாமல் தனது பணியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதையடுத்து, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும், தங்களது தயாரிப்புகளின் மருத்துவத் திறன் குறித்து உயர்ந்த கூற்றுக்களை வெளியிட்டதற்காக உச்ச நீதிமன்றத்தில் "நிபந்தனையற்ற மற்றும் தகுதியற்ற மன்னிப்பு" கோரியுள்ளனர். அதைதொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த விசாரணையிலும் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.