1966ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த சீமானின் தந்தை தீவிரமான காங்கிரஸ்காரர். அதனாலோ என்னவோ, கல்லூரி காலத்தில் இருந்தே திராவிட இயக்க சிந்தனைகளை கைப்பற்றித்திரிந்தார் சீமான்.பின்னர் தன்னுடைய பாதையை சினிமா நோக்கி திருப்பிய சீமான்,பாரதிராஜா, மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அவருடைய முதல் படம் பாஞ்சாலங்குறிச்சி. தன்னுடைய முதல்படத்திலேயே திரையுலகை கவனிக்கவைத்த அவருக்கு அடுத்தடுத்தப் படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. பின்னர் அவர் இயக்கிய ’தம்பி’ திரைப்படம் வெற்றிவாகை சூடியது. 




சினிமா ஒருபக்கம் என்றாலும், அரசியல் சார்ந்த தொடர்ந்து இயங்கி வந்தார் சீமான். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நெருக்கத்தின் காரணமாக 2006ம் ஆண்டு திமுகவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இடையே ஈழப்புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். போர்க்காலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை ஒன்றுதிரட்டி சென்னை மெரினா கடற்கரையில் மெழுவர்த்தி ஏந்தினார்.போர்க்காலச் சமயத்தில் இருந்த நேரம், பிரபாகரனை சந்தித்து பேசினார். தொடர்ந்து இலங்கைப் பிரச்னையை தமிழகத்தில் எதிரொலித்தார். இலங்கையில் தமிழர்கள் கொத்துகொத்தாக கொலைசெய்யப்பட்ட நேரத்தில் அதற்கெதிராக வெகுண்டெழுந்தார். இலங்கை விவகாரத்தில் திமுகவுடன் சீமானுக்கு அதிருப்தி ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அதிரடிப்பேச்சு, கைது, பாஸ்போர்ட் முடக்கம், கண்காணிப்பு என அடுத்தடுத்து சீமானின் வாழ்க்கை பரபரப்பானது. இலங்கை போர் முடிந்த நேரத்தில்  திமுக மீதான அதிருப்தியின் காரணமாக 2009ல் நாம் தமிழர் இயக்கத்தை மதுரையில் துவங்கினார் சீமான். அடுத்த ஆண்டு தனிக்கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்தது. 




திமுகவின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக 2011ல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் சீமான். 2014 எம்பி தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தார். பின்னர் திராவிடக்கட்சிகளை சார்ந்திருக்காமல் தனித்து பயணப்பட்டது நாம்தமிழர். தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்கிற பிரசாரத்தை கையில் எடுத்த சீமான் 234 தொகுதியிலும் தனித்து களம் கண்டார். சீமான் முதல் தேர்தலில் கடலூரிலிருந்து களம் கண்டார். ஆனால் அவரால் 5தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.




2016ல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 1.1, ஆனால் 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் களம்கண்ட நாம்தமிழர் 3.87 வாக்கு சதவீத்தை பெற்று கவனிக்க வைத்தது. வளர்ந்து வரும் வாக்குசதவீதத்தை கணக்கில் கொண்டு அதே நம்பிக்கையுடன் 2021லும் 234 தொகுதிகளிலும் தனித்துக்களம் இறங்கியுள்ளது நாம் தமிழர். சீமான் இந்தமுறை சென்னை திருவொற்றியூர் தொகுதியை குறிவைத்து களம் இறங்கினார். அந்த தொகுதியில் அதிமுக, திமுக,நாம் தமிழர் என தீவிரமான போட்டி நிலவும் எனத் தெரிகிறது. இந்த முறை சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிட வேண்டுமென தீவிரமாக பணியாற்றும் சீமானின் கணிப்பு சரியாக அமையுமா?