Delhi Election 2025: தலைநகர் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லி சட்டமன்ற தேர்தல்:
டெல்லி சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மியும், சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடுமையாக முயன்று வருகிறது. அதேநேரம், பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ், டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில், நாளை பதிவாக உள்ள வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
பலத்த பாதுகாப்பு:
இந்நிலையில், 70 உறுப்பினர்களைக் கொண்ட தலைநகரின் சட்டமன்ற தேதலுக்கான, நாளைய வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய டெல்லி சிறப்பு காவல் ஆணையர் (குற்றம்) மற்றும் தேர்தல் பிரிவின் பொறுப்பாளர் தேவேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா, ”சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்வதில் அனைத்து டெல்லி காவல்துறை ஊழியர்களும் உறுதியாக உள்ளனர்” என குறிப்பிட்டார்.
30,000 போலீசார் குவிப்பு
டெல்லி முழுவதும் 150க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும், 30,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவல்துறையினர் நிறுத்த முடிவு செய்யப்பட்டுஇள்ளது. அமைதி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க விரைவு எதிர்வினைக் குழுக்களும் (QRT) களமிறக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து வழக்கமான பணப் பறிமுதல்களுடன், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை, ரூ.78 கோடி மதிப்புள்ள சுமார் 196 கிலோ போதைப்பொருட்களும், ரூ.3.75 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 8 ஆயிரம் லிட்டர் சட்டவிரோத மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் கலால் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 33,434 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் MCC விதிகளை மீறியதாகக் கூறப்படும் 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோடி Vs கெஜ்ரிவால்:
27 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளித்தீர்கள், ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பளித்து பாருங்கள் என டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் இலவச பேருந்து பயணம், மின்சாரம் மற்றும் கல்வி போன்ற நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.25,000 செலவாகும் என்பதை மனதில் கொண்டு, வாக்களிக்கும்படி டெல்லி மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், மற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால், ஏற்படும் வாக்கு பிரிவு பாஜகவிற்கு சாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது.