Modi Trump: அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பில், இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


ட்ரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி


பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13 ஆம் தேதி வாஷிங்டன் டிசியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பார் என்று மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, மோடி அவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். பிரதமரின் வருகையின் போது அவருக்கு டிரம்ப் இரவு விருந்து அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை மோடி வாஷிங்டன் டிசிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை அமெரிக்க தலைநகரில் தங்கியிருந்து, அந்நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடனும் கலந்துரையாடுவார் என கூறப்படுகிறது.



முக்கியத்துவம் பெறும் சந்திப்பு


ட்ரம்ப் பதவியேற்றதும் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெர்வித்தார். இது தொடர்பாக ட்ரம்ப் ய்தியாளர்களிடம் கூறுகையில் , பிப்ரவரியில் மோடி வெள்ளை மாளிகைக்கு வர வாய்ப்புள்ளது என குறிப்பிட்டது.  மோடிக்கும் டிரம்பிற்கும் இடையிலான தனிப்பட்ட நட்பினை அடிப்படையாகக் கொண்டு, தலைவர்களிடையே ஆரம்பகால சந்திப்பை ஏற்படுத்துவதில் இந்தியத் தரப்பு ஆர்வமாக உள்ளது. இது இருநாடுகளின் ஆழமான ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் மற்றும் உறவை வலுப்படுத்தி கடினமான பிரச்சினைகள் உருவாவதை தடுக்கும் என நம்பப்படுகிறது.


தொலைபேசி உரையாடலின்போது, இந்தியா அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அதிகமாக வாங்குவதன் முக்கியத்துவத்தையும், நியாயமான வர்த்தக உறவை நோக்கி நகர்வதன் முக்கியத்துவத்தையும் டிரம்ப் மோடியிடம் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீதான டிரம்பின் வரிகளைத் தொடர்ந்து , இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்த உரையாடல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


அதிரடி முடிவுகளை எடுத்த இந்தியா:


இந்த காலாண்டில் இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், விளைவுகளை தெளிவாகக் கருத்தில் கொண்டு இந்தியாவில் அமெரிக்க வணிக நலன்களுக்காக இன்னும் தீவிரமாகப் போராடவும் ட்ரம்ப் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியத் தரப்பு ஏற்கனவே அதிக எரிசக்தி கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. சமீபத்திய பட்ஜெட்டில், அமெரிக்க நிறுவனங்களுக்கு பயனளிக்கக்கூடிய முக்கிய பொருட்களின் மீதான சுங்க வரிகளைக் குறைத்தது. பட்ஜெட்டில் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தைத் திருத்தும் நோக்கம் குறித்த அறிவிப்பு, அமெரிக்காவுடன் அதிக வணிக அணுசக்தி ஒத்துழைப்புக்கு வழிவகுத்துள்ளது.


சட்டவிரோத குடியேற்றம் குறித்து மோடியுடன் விவாதித்ததாகவும், மோடி "சரியானதைச் செய்வார்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த அனைத்து இந்தியர்களும் முறையாக இந்தியர்கள் என்று அடையாளம் காணப்பட்ட பிறகு அவர்களைத் திரும்பப் பெறுவதாக இந்தியா ஏற்கனவே கூறியுள்ளது.  இரு தரப்பினரும் தொடர்ச்சியான தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரும்பும் நிலையில், இரு தரப்பினரின் இராணுவங்களுக்கிடையில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளது.