சேலம் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 26 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 70 ஆயிரத்து 357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


சேலம் நாடாளுமன்ற தொகுதி:


டி.எம்.செல்வகணபதி (திமுக) – 5,66,085


ப.விக்னேஷ் (அதிமுக ) – 4,95,728


என். அண்ணாதுரை (பாமக) – 1,27,139


டாக்டர் மனோஜ்குமார் (நாம் தமிழர் ) – 76,207


வாக்குகள் வித்தியாசம் – 70,357


வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி எம் செல்வ கணபதிக்கு வெற்றி சான்றிதழை சேலம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிருந்தா தேவி வழங்கினார்.



பாமக, நாதக டெபாசிட் இழந்தனர்:


வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். குறிப்பாக நடைபெற்ற 26 சுற்றிலும் திமுக வேட்பாளர் செல்வ கணபதி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.


மூன்றாவது இடம் பிடித்த பாமக வேட்பாளர் அண்ணாதுரை மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ் குமார் இருவரும் டெபாசிட் இழந்தனர்.


செல்வகணபதி பேட்டி:


வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சேலம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று கூறினார். தனக்கு வாக்களித்த வாக்காள பெருமக்கள் மற்றும் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு டி.எம்.செல்வகணபதி நன்றி தெரிவித்தார்.



எடப்பாடி அதிமுக கோட்டை:


சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக நேரடியாக களம் கண்டது. திமுக சார்பில் டி எம் செல்வகணபதியும், அதிமுக சார்பில் விக்னேஷும் போட்டியிட்டனர். குறிப்பாக, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நட்சத்திர வேட்பாளர்கள் இல்லை என்றாலும் சேலம் என்பது நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் சேலம் என்பதால் அதிமுக வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அனைத்து சுற்றுகளிலும் அதிமுக முன்னிலை வகித்தது. எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தமாக நடைபெற்ற 23 சுற்றுகளில் அதிமுக 1,23,551 வாக்குகளும், திமுக 77,720 வாக்குகளும் பெற்றது. இதன்மூலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை விட அதிமுக வேட்பாளர்கள் விக்னேஷ் 45,831 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 


குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்றியது. திமுகவிற்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. இதன்படி தமிழ்நாட்டில் அதிமுக தோல்வி அடைந்தாலும், சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. அதன் பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.