நாட்டில் அடுத்து ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.


பாஜக கூட்டணியில் உறுதியாக இருக்கிறேன் - சந்திரபாபு நாயுடு:


தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, டெல்லி செல்வதற்கு முன்பாக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ”இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை. அரசியலில் கூட்டணி முக்கியம் இல்லை. தேச நன்மை மற்றும் மக்கள் நன்மை மட்டுமே முக்கியம் ஆகும். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் நலனை முன்னிறுத்தியே தேர்தலை எதிர்கொண்டோம். பாஜக மற்றும் ஜனசேனா போன்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து கடுமையாக உழைத்ததன் மூலம், வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி சாத்தியாமாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.


ஜெகன் மோகன் மீது குற்றச்சாட்டு:


தொடர்ந்து பேசுகையில், ”கடந்த 5 ஆண்டுகால ஜெகன் மோகனின் ஆட்சி காலத்தில் நான் மோசமாக துன்புறுத்தப்பட்டேன். ஆந்திர மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்தில் ஊடகங்கள் கூட சித்திரவதையை எதிர்கொண்டன. ஜெகனின் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் தூக்கமில்லாத இரவுகளை எதிர்கொண்டனர். ஊடக நிறுவனங்கள் மீது சிஐடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு நபரும் அந்த வலியை உணர்ந்ததாலே, வெளிமாநிலங்களில் மட்டுமின்றி, பெரும் செலவு செய்து வெளிநாடுகளில் இருந்தும் வந்து வாக்களித்துச் சென்றனர்.






பாஜக கூட்டணியில் இருக்கிறேன் - சந்திரபாபு:


மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக கூட்டணி அமைக்கப்பட்டது. அதன் காரணமாகவே மொத்தம் பதிவான 55.38% வாக்குகளில் தெலுங்கு தேசம் கட்சி 45% மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி 39% வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது  வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தெலுங்கு தேசம் கட்சி பெற்றுள்ளது என்றார்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும், யாருடன் கூட்டணி என எழுப்பபட்ட கேள்விக்கு, “நான் அனுபவசாலி, நான் இந்த நாட்டில் பல அரசியல் மாற்றங்களை கண்டுள்ளேன். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம், நான் என்டிஏ கூட்டத்திற்கு செல்கிறேன்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவை இந்தியா கூட்டணிக்கு அழைக்க அக்கூட்டணி தலைவர்கள் மும்முரம் காட்டி வரும் சூழலில் அவர் இவ்வாறு பேசியிருப்புது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.