28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மக்களவை தொகுதியை திமுக கைப்பற்றி இருப்பது, அக்கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980, 1996 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த தேர்தலில் கோவை தொகுதியை திமுக நேரடியாக கைப்பற்றியுள்ளது. அதிலும் நட்சத்திர அந்தஸ்தும், பலம் வாய்ந்த வேட்பாளராக கருதப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை 1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரமாண்ட வெற்றியை தி.மு.க. பெற்றுள்ளது.


பிரம்மாண்ட வெற்றி


வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். பாஜக மாநிலத் தலைவர் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வந்தார். சில சுற்றுகளில் திமுகவை விட கூடுதலாக வாக்குகளை பெற்றாலும், அவரால் இறுதிவரை ஒட்டுமொத்தமாக முன்னிலை பெற முடியவில்லை. அனைத்து சுற்றுகளிலும் கணபதி ராஜ்குமார் கணிசமான வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.


அரசு ஊழியர்கள் மற்றும் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் கணிசமாக வாக்கு அளித்தால், முதல் சுற்று தபால் வாக்குகளில் அண்ணாமலை முன்னிலை பெற்றாலும், இறுதியில் கணபதி ராஜ்குமாரே அதிலும் முன்னிலை பெற்று அசத்தினார். இதனால் வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து சுற்றிலும் கணபதி ராஜ்குமார், அண்ணாமலையை பின்னுக்கு தள்ளி அசத்தினார்.




இறுதியாக 24 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் சேர்த்து கோவை மக்களவை தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரமாண்ட வெற்றி பெற்றார். திமுக 568200 வாக்குகளும், பாஜக 450132 வாக்குகளும், அதிமுக 236490 வாக்குகளும், நாதக 82657 வாக்குகளும் பெற்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வென்ற, அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


யார் இந்த கணபதி ராஜ்குமார்?


60 வயதான கணபதி ராஜ்குமார், கணபதி பகுதியை சேர்ந்தவர்.  எம்.ஏ, எல்.எல்.பி, பிஎச்டி படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். அதிமுகவில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்த கணபதி ராஜ்குமார், 3 முறை கோவை மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். இரண்டு முறை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக இருந்த இவர், 2014 ம் ஆண்டு நடந்த கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 வரை கோவை மாநகராட்சி மேயராக இருந்தார்.


எஸ்.பி. வேலுமணி ஆதரவாளராக இருந்த இவர், அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.  பின்னர் எஸ்.பி. வேலுமணி உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், கட்சி பணிகளில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2020 திமுகவில் கணபதி ராஜ்குமார் சேர்ந்த நிலையில், அவருக்கு மாநகர மாவட்ட அவைத்தலைவர் பதவி தரப்பட்டது. இவர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக இருந்து வந்தார். திமுகவில் வேட்பாளராக பலர் போட்டியிட ஆர்வம் காட்டிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படித்தவர், மேயராக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்ற முறையில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சவால்கள் நிறைந்த கோவை மக்களவை தொகுதியில் எளிதாக அண்ணாமலையை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் கணபதி ராஜ்குமார் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.