சுடச்சுட வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவடைந்து, இன்று வேட்பு மனு பரிசீலனை நடந்து வருகிறது. காலையிலிருந்து பரிசீலனை நடைபெறும் அலுவலகத்தில் வேட்பாளர் கூடி, தங்கள் மனு மீதான பரிசீலனையை கண்காணித்து வருகின்றனர். மனுக்கள் ஏற்கப்பட்டால் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், பரிசீலனை மிக முக்கியமாகும்.
அந்த வகையில், சில வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயே., வேட்பாளர் பலரின் மனுக்கள், விதிகளை மீறியதாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி 5வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் காவியா என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று அவரது வேட்பு மனு பரிசீலனைக்கு வந்த போத, அவருக்கு 21 வயது பூர்த்தியாகாதது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரது வேட்புமனுவை ஏற்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்வதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். அதிர்ச்சியடைந்த காவியா, ‛தனக்கு போட்டியிட வாய்ப்பளிக்குமாறு...’ கோரினார். ஆனால், விதிகள் அதற்கு இடமளிக்காது என்று தேர்தல் அலுவலர் கூறினார். இதனால் ஏமாற்றம் அடைந்த காவியா, அங்கிருந்து வெளியேறினார். தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பு தெரியாமல், ஆர்வத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதும், அது இறுதியில் பயனற்று போனதும், அந்த இளம் பெண்ணுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று வேட்பாளர் இல்லாததால், அந்த வார்டில் நாம் தமிழர் சார்பில் வேறு யாரும் போட்டி போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அங்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் யாரையாவது நாம் தமிழர் கட்சியில் போட்டியிட செய்யும் முயற்சியில் அக்கட்சியினர் இறங்கியுள்ளனர். அது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது தெரியவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்