தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று நகர்ப்புற ஊராட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இன்று வேட்புமனு பரிசீலனை தொடங்கியது. இந்த நிலையில் கரூர் நகர்ப்புற தேர்தலில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை கரூர் மாநகராட்சி அலுவலகம், குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
வேட்புமனு பரிசீலனையை முன்னிட்டு, மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வேட்பாளர்கள் வருகைக்காக பிரத்யேகமாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு முகக்கவசம் அளிக்கப்பட்டது. மேலும், தகுந்த இடைவெளி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வார்டு பெயர் வாசிக்கப்பட அந்த வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது ஆவணங்களுடன் சென்றனர்.
அந்தவகையில் கரூர் மாநகராட்சியில் 38ஆவது வார்டில் போட்டியிட பாஜகவைச் சேர்ந்த சீதா செந்தில்குமார் என்பவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த வார்டு பொது வார்டு ஆகும். அவரது வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடக்கையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணி தெரிவித்தார்.
தனது வேட்புமனு எதற்காக நிராகரிக்கப்பட்டது என சீதா தரப்பில் விளக்கம் கோரப்பட்டது. அப்போது, டெபாசிட் தொகை 4,000 ரூபாய் கட்ட வேண்டும். ஆனால் 2000 ரூபாய்தான் டெபாசிட் தொகை கட்டப்பட்டுள்ளது. அதனால் நிராகரிக்கப்படுகிறது என தேர்தல் அலுவலர் கூறியதாக தெரிகிறது. குறைவான டெபாசிட் தொகையால் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் கரூரில் பேசுபொருளாகியுள்ளது.
இதனையடுத்து டெபாசிட் தொகையில் மீதம் இருக்கும் 2000 ரூபாயை அவர் மீண்டும் இன்று செலுத்தி அதற்குரிய ரசீதை அதிகாரியிடம் கோரிக்கை மனுவுடன் கொடுத்துள்ளார். அதனை அதிகாரிகள் தரப்பு பரிசீலிக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தங்கமணி வேண்டும் என்றே எங்கள் வேட்பு மனுவினை தள்ளுபடி செய்ய முயற்சிப்பதாகவும், அவரை மாற்ற வேண்டும் எனவும் வேட்பாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சீதா, எனது வேட்புமனு நிகாரிக்கப்பட்டது தொடர்பாக மேல் அதிகாரியை பார்ப்பேன் என்று கூறிவிட்டு நிர்வாகிகளுடன் அங்கிருந்து கிளம்பினார். பாஜக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்