தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவருக்கு ரஞ்சிதம்(70), ராமி(45) என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ரஞ்சிததிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்கவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்பதால் கிருஷ்ணன் ராமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து இரண்டாவது மனைவி ராமிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டு மனைவிகளும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வசித்தனர்.
சூழல் இப்படி இருக்க, கிருஷ்ணனின் முதல் மனைவி ரஞ்சிதம் பெயரில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை இரண்டாவது மனைவி ராமி, பணம் ரூ.5 லட்சம் கொடுக்கிறேன், நிலத்தை தனக்கு எழுதி கொடுக்கும்படி ரஞ்சிதத்திடம் கேட்டுள்ளார்.
அதற்கு ரஞ்சிதம், நிலத்தை தர முடியாது என மறுத்துள்ளார். இந்த 2 ஏக்கர் விவசாய நில பிரச்சினையால், ரஞ்சிதம், ராமி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் (3.2.2022) பிற்பகல் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்பொழுது ரஞ்சிதம் நிலத்தை தருவதற்கு தொடர்ந்து மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமி யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து வீட்டுக்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சிதம் மீது ஊற்றி தீ வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததால், ரஞ்சிதம் அலறியுள்ளார். இதனை கண்ட ராமியின் மகன் மோகன், சத்தமிட்டவாறு ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ரஞ்சிதத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால், தீ காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரஞ்சிதம் அழைத்து செல்லப்பட்டார். 70 வயதான ரஞ்சிதம், 80 சதவீதம் தீக்காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏரியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இரண்டாவது மனைவி ராமியை கைது செய்தனர். இந்தச் சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்