வைரஸை கொல்லும் தன்மையுடைய, பயோ-டீக்ரடபுல் மாஸ்குகளை தயாரித்துள்ளது இந்திய ஆராய்ச்சியாளர்கள் குழு. கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தது முதல், தடுப்பூசிக்கு முன்பாக ஒரே தீர்வாக கருதப்பட்டது முகக்கவசம்தான். சீனாவின் வுஹான் நகரில் இருந்து 2019-ஆம் ஆண்டு உருவானது முதல் மாஸ்க் என்பது உலக மக்கள் வாழ்வில் பெரும் பங்காக மாறி, இன்றுவரை உலகம் மாஸ்கை கழற்ற தயாராகவில்லை.


ஏறக்குறைய இரண்டேகால் ஆண்டுகள் கடந்துவிட்டோம் என்றாலும், மாஸ்க் என்பது நம் வாழ்நாள் முழுவதும் அணியவேண்டிய ஒரு பெருளாக, நம் வாழ்வோடு இன்றியமையாத பொருளாக மாறும் என்று பல அறிஞர்கள் கணிக்கின்றனர். அதற்காக முகக்கவசத்தில் உள்ள சில நிறை குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல விஷயங்களை பலரும் செய்துகொண்டிருக்க, இந்திய விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான விஷயத்தை கண்டு பிடித்துள்ளனர்.



என்னதான் நாம் ஏற்கனவே என்95, சர்ஜிக்கல் மாஸ்க் போன்ற பல மாஸ்குகளை பயன்படுத்தி கோரோணாவை விட்டு விலகி இருந்தாலும், இந்த மாஸ்க்குகளின் மீது வைக்கப்படும் இரு வேறு மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அதில் முதலாவது, முகக்கவசம் வைரஸை தடுக்கிறதே தவிர, கொள்வதில்லை என்பதும், இரண்டாவது, அணிந்த மாஸ்குகளை களையும் இடம். அதாவது நாம் பயன்படுத்தும் வலுவான முகக்கவசங்கள் எல்லாம் ஒருமுறை பயன்பாடுக்கு உரியது. அப்படி இருக்கையில், எவ்வளவு மாஸ்குகளை,எவ்வளவு பேர் இணைந்து பயன்படுத்துவார்கள், இது வருங்காலத்தில் எவ்வளவு பெரிய அழிக்க முடியாத குப்பையாக உலகின் பாரமாக மாறும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கேள்வி எஸ்குப்புகின்றனர். இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வாக வருவதுதான் இந்த புதிய கண்டுபிடிப்பு. இது வைரஸை 99.9% கொல்கிறது என்றும், ஒருமுறை பயன்படுத்தினால் துவைத்துவிட்டு மீண்டும் பயன்படுத்தும்படியும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.



கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக, தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்கள் பூசப்பட்ட வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு, தொழில்துறையை சேர்ந்த நபர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ், பல்வேறு இதர வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக உயர் செயல்திறனை இந்த முகக்கவசம் கொண்டுள்ளது. மக்கும் திறன் கொண்ட இந்த முகக்கவசம், நல்ல முறையில் சுவாசிப்பதற்கான வசதியைக் கொண்டுள்ளது, அதுமட்டுமின்றி, சலவை செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்று கூறப்படுகிறது.


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான பவுடர் மெட்டலர்ஜி மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச முன்னேறிய ஆய்வு மையத்தைச் (ஏஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் ரெசில் கெமிக்கல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர். கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நானோ-மிஷன் திட்டத்தின் கீழ் கிருமிநாசினித் திறனுடன் கூடிய, எளிதில் மக்கும் முகக்கவசங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.