இந்திய அரசியலின் எதிர்காலம் ராகுல் காந்திதான் என பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி புகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது.


ராகுல் காந்தியை புகழ்ந்தாரா அத்வானி?


பல பயனர்கள் உள்பட அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. "இந்திய அரசியலின் ஹீரோ ராகுல் காந்தி: லால் கிருஷ்ண அத்வானி (எல்.கே. அத்வானி)" என அந்த பதிவில் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவுடன் avadhboomi.com என்ற இணையதளத்திற்கான இணைப்பும் இணைக்கப்பட்டிருக்கிறது. 




இருப்பினும், இந்த செய்தி பொய்யானது என கண்டறியப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை இல்லாத இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் அடிப்படையில் இந்த தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அத்வானி அப்படி பேசியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.


உண்மை தெரிய வந்தது எப்படி?


வைரலான பதிவின் கேப்ஷனில் avadhbhoomi.com என்ற இணையதளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தளத்தில் சென்று பார்க்கையில், "ராகுல் காந்தி இந்திய அரசியலின் நாயகன்: எல்.கே. அத்வானி" என்ற தலைப்பில் இந்தியில் வெளியான கட்டுரையைக் கண்டோம்.


கடந்த 8ஆம் தேதி, வெளியிடப்பட்ட இந்த கட்டுரை தற்போது நீக்கப்பட்ட நிலையில், அந்த செய்தியை நாங்கள் Archive செய்துள்ளோம். அதை, இங்கே காணலாம். ராகுல் காந்தி போன்ற செல்வாக்கு மிக்க தலைவரை தான் பார்த்ததில்லை என அத்வானி பாராட்டியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து எங்கே தெரிவிக்கப்பட்டது, எப்போது தெரிவிக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. அந்த இணையதளத்தில் டிஸ்கிளைமர் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, "இந்தத் தகவலின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து avadhbhumi.com எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை"


அடுத்து, இணையதளத்தின் சமூக ஊடக பக்கங்களை தேடி பார்த்தோம். மார்ச் 3, 2024க்குப் பிறகு Facebook பக்கத்தில் எந்தப் பதிவும் வெளியிடப்படவில்லை என்பதைக் கண்டறிந்தோம். அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் (இங்கே காப்பகம்) தொடர்பில்லாத, தனிப்பட்ட வீடியோக்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.


வழிகாட்டுதல்களை மீறியதற்காக அவர்களின் YouTube சேனல் நீக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி நிறுவனத்தையே அணுகியுள்ளோம். பதில் கிடைத்தால், இந்த புதுப்பிக்கப்படும்.


Logically Facts இணையதளத்திற்கு அத்வானியின் உதவியாளர் தீபக் சோப்ரா அளித்த பேட்டியில், "இந்த செய்தி முற்றிலும் போலியானது. அத்வானிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார். அத்வானி இப்படி பேசியதாக நம்பகத்தகுந்த செய்தி நிறுவனம் எதுவும் செய்தி வெளியிடவில்லை.


முடிவு என்ன?


இந்திய அரசியலின் எதிர்காலம் ராகுல் காந்தி என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறவில்லை. எனவே, இது பொய்யான தகவல்.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Logically Facts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது.