Punjab Election Result 2022: நடிந்து முடிந்த உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள் இன்று தெரியும். ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களில் 89 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி(aam aadmi party) முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்டு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு கூடுதல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி பஞ்சாபில் வரலாறு காணாத வெற்றி அடையும் என்று தேர்தலுக்கு முந்தயை கருத்துக் கணிப்பின் படிதான் களநிலவரம் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, டெல்லியைத் தாண்டி ஒரு மாநிலத்தில் வெற்றியை எப்படி சாத்தியப்படுத்தியது?



 


ஆம் ஆத்மி கடந்து வந்த பாதை:


டெல்லி தாண்டி பல மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிளைகள் இருந்தாலும், ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்துள்ள மற்றொரு மாநிலம் பஞ்சாப்தான்.


ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னமே பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டது. 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடு முழுவதும் 434 இடங்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆம் ஆத்மி டெல்லியிலேயே ஓர் இடத்தைக்கூடக் கைப்பற்றவில்லை. எனினும் பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றியடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது. அதன் பின்னர், டெல்லியைக் கைப்பற்றியது. இதை தொடர்ந்து, டெல்லிக்கு அடுத்தபடியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனம் முழுக்க பஞ்சாப் மாநில அரசியலை நோக்கி நகர்ந்தது. அவர் தனது கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை தொடர்ச்சியாக செய்துவந்தார்.


பஞ்சாப் மாநிலத்தை பொருத்தவரை பாரம்பரியமாக அகாலிதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலமான கட்சி. அப்படியிருக்கையில், கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரைக்கூட அறிவிக்காமல் துணிச்சலாகப் போட்டியிட்டது ஆம் ஆத்மி கட்சி.  அரவிந்த் கெஜ்ரிவால் `டெல்லி மாடலை' முன்வைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  தேர்தலில் போட்டியிட்ட முதல் முறையே அங்கு 20 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது ஆம் ஆத்மி. அப்போது, தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க, அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அகாலி தளம் 15 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும் மட்டுமே வென்றன. ஆனால். இதற்கு அடுத்து ஆம் ஆத்மி கட்சியில் உள் கட்சி பூசல்கள் ஏற்பட்டு அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதிலும் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியுடன், 2022  தேர்தலை முன்வைத்து இரண்டாண்டுகளுக்கு முன்பே கட்சிப் பணிகளைத் தொடங்கினார். கட்சியில் பல மாற்றங்களை முன்னெடுத்தார். தேர்தலுக்கான அவருடைய திட்டங்களில் புதுமையாக இருந்தது. டெல்லி மாடல் யுக்திகளைக் கொண்டு பஞ்சாப்பிற்கான தேர்தல் வீயூகத்தை வகுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். 




இதற்கிடையில், 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால்(arvind kejriwal) வெற்றிபெற்றார். இது பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு புது உத்வேகத்தைக் கொடுத்தது.  பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சிதான் என தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படத் தொடங்கினர்.


இது ஒருபுறம் இருக்க, பஞ்சாப் மாநிலத்தில், பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல்கள் ஏற்பட்டு, கட்சியில் நிலைத்தன்மையே கேள்விக்குறியானது. கட்சியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத காங்கிரஸால் எப்படி பஞ்சாப் மக்களைக் காப்பாற்ற முடியும் என ஆம் ஆத்மி பேசத் தொடங்கியது. போலவே, பாஜகவும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட விவசாயிகளின் வெறுப்பைச் சம்பாதித்தது. பஞ்சாப் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.  


இதோடு மட்டுமல்லாமல், அப்போது அதிகரித்த உட்கட்சிப்பூசல்களால் காங்கிரஸில் இருந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், தனிக்கட்சி ஆரம்பித்தார். அவர் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்தார்.


இப்படியிருக்க, வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டிற்கும் மேலாக  தொடர்ந்த விவசாயிகளின் போராட்டம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் போன்றவற்றை கருத்தில்கொண்டு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டது மத்திய அரசு. இருப்பினும், போராட்ட காலத்தில் மத்திய பாஜக அரசு விவசாயிகளிடம் கடுமையுடன் நடந்துகொண்டவிதம் ஆகியவற்றை மக்கள் நன்கு கவனித்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மக்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் தொடந்து சந்தித்த சிக்கல்களில் இருந்து விடுபட நினைத்தனர். இவை ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் மக்களிடம் தங்களை முன்னிருத்த ஒரு வாய்ப்பாக இருந்தது.




ஆம் ஆத்மி கட்சியின் வியூகம்:


இது தவிர, டெல்லியில் முன்னெடுத்தத் திட்டங்களை, ஆம் ஆத்மி பஞ்சாப் மாநிலத்திலும் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. தனது தேர்தல் பிரச்சாரத்தில் குடிநீர், மின்சாரம், மருத்துவம் என மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தியது. குறிப்பாக, டெல்லி மாடலை அப்படியே செயல்படுத்தினார் அரவிந்த் கெஜ்ரிவால்.


பஞ்சாப் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றால், 18 வயது பூர்த்தியடைந்த மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மாநிலம் முழுக்க 16,000 மருத்துவ கிளினிக்குகள் அமைக்கப்படும், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்படும் என அதிரடியான மக்களை ஈர்க்கும் திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்தது.


பஞ்சாப் மாநில தேர்தலை முன்வைத்து கடுமையாக உழைக்கத் தொடங்கியது ஆம் ஆத்மி கட்சி. மக்களிடம் தங்கள் திட்டங்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட வேலைகளை இரண்டு ஆண்டுகள் முன்னரே தொடங்கியது ஆம் ஆத்மி. பஞ்சாப்பில் மொத்தம் 117 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. குறைந்தது 59 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பெரும்பான்மையைத் தக்கவைக்க முடியும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.



இதோடு, முதல்வர் வேட்பாளராக ஒரு கலைஞரை தேர்தெடுத்ததும் இதற்கு காரணமாக அமைந்தது. ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு தொடர்பு எண்களை வழங்கி, அதன் மூலம் அவர்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் கேட்டறிந்தது. அப்படி தேர்வு செய்யப்பட்டவர்தான் பகவந்த் மான். (Bhagwant Mann) இப்படி தேர்தல் பிரச்சாரங்களிலும் பல புதுமையான வழியை கையாண்டது ஆம் ஆத்மி.  2014 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றிபெற்ற நான்கு பேர்களில் பக்வந்த் மானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பஞ்சாப் மக்களிடம் உங்களுக்கு யார் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் எனக் குறுஞ்செய்தி அனுப்புங்கள் என கருத்துக் கேட்டபோது,  சுமார் 21 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பக்வந்த் மான் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். மக்களின் குரலுக்கு  முக்கியத்துவம் அளித்து இந்த முடிவை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்தது முக்கியமானதாகவும், புதுமையானதாகவும் பார்க்கப்படுகிறது.


பொதுமக்களுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமான தொடர்பை மேம்படுத்தியது , டெல்லியில் வெற்றியடைந்த திட்டங்களின் ஃபார்முலாக்களை, டெல்லி மாடலாகக் குறிப்பிட்டு தேர்தல் பிரசாரம் செய்தது, தொகுதிவாரியான பிரச்னைகளைக் கையிலெடுத்து அதற்கு தீர்வு வழங்குது பற்றி விவாதித்தது, கவர்ச்சிகர திட்டங்களுக்கு மாறாக மக்களின் அடிப்படைத் தேவைகளை அடியொற்றி வாக்குறுதிகள் வழங்கியது, என ஆம் ஆத்மி இந்த தேர்தலுக்கு தங்களை தயார்படுத்த மேற்கொண்ட வழிமுறைகள் அனைத்தும் புதுமையை வெளிப்படுத்தின. டெல்லி மக்களுக்கு பழகிய அரசியல் பஞ்சாப் மக்களுக்குப் புதுமையானதாக இருந்தது.



பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் பாரம்பரிய பலமான கட்சிகளைத் தாண்டி வென்றிருக்கிறது ஆம் ஆத்மி.


கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் 23.8% வாக்குகளை பெற்றிருந்த ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் இதுவரை 41.5% வாக்குகளை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கக்து.


கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 35 இடங்களில் 14 இடங்களைத் தனித்து நின்று கைப்பற்றியது. இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராகவ் சதா, `சண்டிகர் வெறும் டிரெய்லர்தான். உண்மையான படம் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்தான்’ என அதிரடியாக தெரிவித்தார். அதுபோலவே இப்போது அதற்கேற்றாற்போல் பஞ்சாப் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பறியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.




பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்த ஆம் ஆத்மி கட்சியின் (aam aadmi party) முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தன்னைப் பொறுத்தவரை, "சிஎம் என்றால் சாமானியர்" என்றும், உயர் பதவி கிடைத்தாலும் சாமானியராக தான் இருப்பேன் என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். 


தொடர்ந்து அவர் இதுகுறித்து பேசுகையில், “புகழ் எப்பொழுதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்குமே தவிர முதலமைச்சரானால் அது என் தலையில் ஏறாது. பதவியை நான் ஆளுவேன், ஒருபோதும் பதவி என்னை ஆளாது. நான் இன்னும் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக, அவர்களுடன் இணைந்து பணியாற்றுவே விரும்புகிறேன். நான் முதலமைச்சரானால் எனது அரசியல் என் தலையை சீர்குலைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல. மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள். அதையேதான் நானும் விரும்புகிறேன். மீண்டும் பஞ்சாப்பை பஞ்சாப் ஆக்குவோம். இதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை . ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


 


Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!


Punjab Election Result 2022: "பதவியை நான் ஆளுவேன், ஒருபோதும் பதவி என்னை ஆளாது" : பஞ்சாப் வெற்றி வேட்பாளர் பகவந்த் மான்