Puducherry Lok Sabha Election Results 2024: புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை
  


புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது, முதலவதாக தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 2965 வாக்குகளும், பாஜக நமச்சிவாயம் 1890 வாக்குகளும் பெற்றுள்ளனர்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தவகையில், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதான காரணத்தால் பிரச்சனைகள் எழுந்தன. மற்றபடி, எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 10,23, 699 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,76431 ஆண் வாக்காளர்களும், 4,27742 பெண் வாக்காளர்களும், 104 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.


வாக்குப்பதிவில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 78.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாகப் புதுச்சேரி மாவட்டத்தில் 77.69 சதவீத வாக்குப்பதிவும், குறைந்த பட்சமாக மாஹேவில் 65.11 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. மேலும், ஏனாம் மாவட்டத்தில் 76.8% வாக்கும், காரைக்காலில் 75.65% வாக்கும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


26 வேட்பாளர்கள் போட்டி


புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு அலுவலா்கள் உள்ளிட்ட 631 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் 5 மையங்களிலும் 1,500 காவலர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக,காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் உள்ளிட்ட 26 போ் போட்டியிடுகின்றனா். தோ்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது.


79.41 சதவீதம் வாக்கு பதிவு


தோ்தலில் வாக்களிக்க 10,23,699 போ் தகுதி பெற்றிருந்தும், 8,07,724 வாக்காளா்கள் மட்டுமே தங்கள் வாக்கை பதிவு செய்திருந்தனா். அதண் அடிப்படையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே ஆகிய 4 பிராந்தியங்களையும் சோ்த்து மொத்தம் 78.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் 79.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.


5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை 


புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணிக்கை பிராந்திய வாரியாக புதுச்சேரியில் 2 மையங்களிலும், காரைக்கால், ஏனாம், மாஹே ஆகியவற்றில் தலா ஒரு மையம் என மொத்தம் 5 மையங்களில் நடைபெற்று வருகிறது.


வாக்கு எண்ணும் பணியில் 143 வாக்கு எண்ணும் மைய மேற்பார்வையாளர்கள், 151 வாக்கு எண்ணும் மைய உதவி அலுவலா்கள், 137 நுண் பார்வையாளா்கள், 200 ஊழியா்கள் (வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்பவா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோர் என மொத்தம் 631 போ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


4 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை


வாக்கு எண்ணிக்கைக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 3 சுற்றுகள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரியாங்குப்பம், மணவெளித் தொகுதிகளுக்கு மட்டும் தலா 4 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 97 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெறவுள்ளது.


மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் புதுச்சேரியின் 2 மையங்களிலும் 3 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதில், சுமார் 500 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படட்டுள்ளனர். காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களைச் சோ்த்து மொத்தம் 1,500 காவலர்கள் வரை வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.


புதுச்சேரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 10,20,914


 ஆண் வாக்காளர்கள்: 4,79,329


 பெண் வாக்காளர்கள்: 5,41,437


 மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 148