மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து எனது கணிப்புகள் தவறாகி விட்டது. இனி கட்சிகளுக்கு கிடைக்கப்போகும் எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள், தேர்தல் வியூக நிபுணர்களும் பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவே இல்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பிரதமராக தொடர்ச்சியாக 3வது முறை மோடி நாளை பதவியேற்கிறார். 

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பிரஷாந்த் கிஷோரின் கணிப்புகள் பொய்யானது பற்றி பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இதற்கு பிரஷாந்த் கிஷோர் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்து பேட்டியில், “நானும், தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆய்வு செய்வோரும் தவறாக கணித்து விட்டோம். மக்களின் விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறோம். இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சி ஜெயிக்கும் என கணிப்பு சொல்வேனே தவிர, எத்தனை இடங்கள் ஜெயிக்கும் என கணிக்க மாட்டேன். பல விஷயங்களால் மக்களவை தேர்தலில் எனது கணிப்பு பொய்யாகிவிட்டது. 

Continues below advertisement

பாஜக 300ஐ நெருங்கி விடும் என நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்கள் 240 இடங்களில் மட்டுமே ஜெயித்தார்கள். அதேசமயம் பிரதமர் மோடிக்கு எதிராக சின்னதாக கோபம் இருப்பதை முன்கூட்டியே குறிப்பிட்டேன். ஆனால் அது அதிருப்தியாக மாறாது எனவும் கூறினேன். எண்ணிக்கையை தவிர்த்து பார்த்தால் எனது கணிப்புகள் தவறாக இல்லை. மேலும் எதிர்கட்சிகள் ஒரு பாசிட்டிவான பிரச்சாரத்தை முன்வைக்கவில்லை.

மொத்த வாக்கு சதவிகிதத்தில் பாஜக 36 சதவிகிதம் பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலை காட்டிலும் 0.7% மட்டுமே குறைவாகும். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் கணிப்பை எண்களில் தெரிவித்திருக்க கூடாது. கடந்த 2 ஆண்டுகளில் நான் செய்த இரண்டாவது தவறு இது” என பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

கடந்த மே 23 அன்று சமூக ஊடக தளமான Xல் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரஷாந்த் கிஷோர், “மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இந்தத் தேர்தலின் முடிவைப் பற்றிய எனது கணிப்பை கண்டு திகைத்து போனவர்கள் மனதையும் உடலையும் நீரேற்றமாக வைத்திருப்பதால் தண்ணீர் அருந்துவது நல்லது. அந்த வகையில் ஜூன் 4ல் தண்ணீருடன் தயாராக இருங்கள்” என கூறியிருந்தார்.