மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமுல் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் கட்சியின் தலைவரான மமதா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார். 


அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இது குறித்து தெரிவித்திருந்த மமதா பானர்ஜி, மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் என தெரிவித்தார். இந்நிலையில் இன்றே ஆட்சியமைக்க உரிமை கோரினார் மமதா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் துரிதமாக அரசு செயல்பட வேண்டியிருப்பதால் உடனடியாக ஆட்சியமைக்க உரிமை கோருவதாக திரிணாமுல் வட்டாரம் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து நாளை மறுநாள் மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி. 




இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநரை இன்று இரவு 7 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். நேற்று முதல் மம்தாவிற்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். எத்தனை எத்தனை வாழ்த்துகள் வந்தாலும் தன்னுடைய அடுத்தக்கட்டத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார் மமதா. அதிக அளவில் வாழ்த்துகள் குவிந்தாலும் தேர்தல் வெற்றிக்கு பிறகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து இதுவரை எந்த பதிவையும் மமதா பதிவிடவில்லை. ஆனாலும் அவருக்கான வாழ்த்துகள் குவிந்த வண்ணமே உள்ளது.