தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க போகிறது திராவிட முன்னேற்றக் கழகம். வரும் 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறவுள்ள விழாவில் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் தமிழக அமைச்சரவை பட்டியலில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.


சென்னையை பொருத்தவரை துறைமுகம் எம்.எல்.ஏ சேகர்பாபு, சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் ஆகியோர் அமைச்சர் ஆவார்கள் என தெரிகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஆவடி தொகுதியில் தோற்கடித்த நாசருக்கு அமைச்சரைவில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமான சி.வி.எம்.பி.எழிலரசன், விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் எம்.எல்.ஏவுமான பொன்முடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆகியோருக்கு தமிழக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.


அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ பிச்சாண்டி ஆகியோருக்கும், வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி எம்.எல்.ஏவுமான துரைமுருகன், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்தி உள்ளிட்டோர் அமைச்சராக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. கடலூரில் முன்னாள் அமைச்சரும் குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திட்டக்குடி தனித் தொகுதி எம்.எல்.ஏ கணேசன் ஆகியோரும் அமைச்சராக்கப்படவுள்ளதாக தெரிகிறது.



கொங்கு மண்டலத்தை பொருத்தவரை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்த நிலையில், கரூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள செந்தில்பாலாஜி, வெள்ளகோவில் தொகுதி எம்.எல்.ஏ சாமிநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தாராபுரம் தனித் தொகுதியில் பாஜக மாநில தலைவர் முருகனை தோற்கடித்த திமுக எம்.எல்.ஏ கயல்விழி செல்வராஜூக்கும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.


டெல்டா மாவட்டங்களை பொருத்தவரையில் திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சரும் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கேன்.என்.நேரு, திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏவும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ், மன்னார்குடியில் தொகுதியில் 3-வது முறையாக தொடர்ந்து எம்.எல்.ஏ ஆகியுள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மகனான டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நிச்சயம் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படும் நிலையில், திருமயம் தொகுதி எம்.எல்.ஏவும் மூத்த நிர்வாகியுமான ரகுபதிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.




சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பெரிய கருப்பன், மானாமதுரை தனித் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருமான தமிழரசி ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஐ.பெரியசாமி, திமுக கொறடாவும் ஒட்டன்சத்திரம் எம்.எல்வுமான சக்கரபாணி ஆகியோருக்கு அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


மதுரையை பொருத்தவரை மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ கோ.தளபதி,  அதேபோல் தேனி மாவட்டம் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் ஆகியோரும் தமிழக அமைச்சரவை பட்டியலில் இடம் பெறுவதற்கான முயற்சிகளில் உள்ளனர்.




விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி எம்.எல்.ஏவும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தன் குடும்பத்திற்கென தனி செல்வாக்கை பெற்றிருப்பவருமான தங்கம் தென்னரசு இந்த முறையும் அமைச்சர் ஆவது உறுதியாகியுள்ளது. மேலும், அருப்புக்கோட்டையில் இந்த முறை போட்டியிட்டு 9-வது முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ள கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நெல்லை மாவட்டத்தை பார்த்தோமேயானால் முன்னாள் அமைச்சர் பூங்கோதையும், மூத்த நிர்வாகியும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனும் தோல்வியை தழுவிய நிலையில், திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், ராதாபுரம் தொகுதியில் இந்தமுறை வென்று எம்.எல்.ஏ ஆகியிருப்பவருமான அப்பாவுக்கு அமைச்சர் பொறுப்பு தரப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.


கிறிஸ்துவ நாடார் சமூகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதா ஜீவனுக்கும், 6-வது முறையாக திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ள அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் அமைச்சரவையில் இடம் பிடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற மனோ தங்கராஜிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த பட்டியலில் இருந்து ஒட்டுமொத்தமாக 28 முதல் 30 பேர் வரை அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.