நீலகிரி தேயிலையை பார்த்ததால் டீ விற்பவரின் மகனுக்கு மகிழ்ச்சிதான் என மேட்டுபாளையத்தில் நடைபெற்று வரும் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.


கோவையில் பிரதமர்:


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று கோவை மேட்டுப்பாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை கூட்டத்தில் உரையாற்றினார்.


பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, ”நீலகிரி தேயிலையை பார்த்ததால் டீ விற்பவரின் மகனுக்கு மகிழ்ச்சிதான். நீலகிரி வேட்பாளர் எல்.முருகனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வெறுப்பு அரசியலை பின்பற்றுகிறது திமுக அரசு, சனாதன தர்மத்தை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்து கொண்டிருக்கிறது.  


திமுக - வாரிசு அரசியல்:




குடும்ப வாரிசுகளே அரசியல் தலைவர்களாக வர வேண்டும் என திமுகவினர் நினைக்கிறார்கள். திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு பாஜகவால் மட்டுமே முடியும். தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் தி.மு.க., பழைய அரசியலில், ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை.


திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. மூன்று முக்கிய அளவுகோல்கள் - குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழ் கலாச்சார எதிர்ப்பு.


குடும்ப அரசியல், ஊழலால் திமுக தமிழகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறது. தமிழகத்தை, திமுக குடும்பம் கொள்ளை அடிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது திமுக.


திமுக கட்சியானது பழைய சிந்தனையிலேயே இருக்கிறது. தற்போது,  தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கம் மற்றும் கடத்தல் அதிகரித்துள்ளது. திமுக, காங்கிரஸ்காரர்கள் தங்கள் சந்ததிகளை மட்டுமே முன்னிறுத்துவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். 


பல லட்சம் கோடி நிதி:


கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வால் கோவை ஜவுளி தொழில் பாதித்துள்ளது . திமுக, காங்கிரஸால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. 


பாஜக அரசானது, பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கியுள்ளது . மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு மின்சாரமும், குடிநீரும் வழங்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். 


இதையடுத்து, வந்தே மாதரம் என தொண்டர்களின் பலத்த கோசத்துடன் உரையை முடித்தார் பிரதமர் மோடி 


Also Read: Power Pages-5: பிறந்த இடத்தில் தோல்வி; 3 முறை பிரதமர்; 2 முறை ஆட்சி கவிழ்ப்பு: தெரியுமா வாஜ்பாய் வரலாறு