கரூர் மாவட்டம்,  வேலாயுதம்பாளையம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கரூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சின்னச்சாமி மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், ஒன்றிய, பேரூர், வார்டு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும் மற்றும் நகர்ப்புற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்  கலந்து கொண்டனர். 




 


தேர்தல் பரப்புரை கூட்டத்தில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், 1972ஆம் ஆண்டு அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி 3 முறை ஆட்சி நடத்தி சத்துணவு திட்டம் போன்ற சாதனை திட்டத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்.  பின்பு ஜெயலலிதா 16 ஆண்டுகாலம் தொலை நோக்கு திட்டங்களை உருவாக்கியவர். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த வரலாறு அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேசிய அளவில் உயர் கல்வி  24 சதவீதத்தில் இருந்து  52 சதவீதமாக உயர்ந்தது.



காவிரி பிரச்னையையில் இறுதி தீர்ப்பை போராடி மத்திய அரசிதழில் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி கட்டிலில் அமரும் சூழ்நிலை இருந்தது. பொய்யான வாக்குறுதிகளால் திமுக ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்குக்கான முதல் கையெழுத்து என்றார்கள் செய்தார்களா?, திமுக கையாலாகாத அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை பார்த்து நாடே சிரிக்குது. அதிமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் பணமும் கொடுத்தோம். இப்போது நயா பைசா  கூட இந்த அரசால் கொடுக்க முடியவில்லை. பொங்கல் பரிசு குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், பொருள்கள் தரமற்றவை என கொடுத்துள்ளது.  இதற்காக ராஜினாமா செய்து விடுவார்களா.




எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கு யார் துரோகம் செய்தாலும் அதன் பலனை அனுபவிப்பார்கள். அதிமுகவில் சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக, முதல்வராக வர முடியும். வேறு கட்சியில் வர முடியுமா. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை பாராட்டுகிறார்.  இந்த 10 மாதத்தில் திமுக வேஷம் கலைந்துவிட்டது. பொய்யான வாகக்குறுதிகளை நம்பி திமுகவுக்கு வாக்களித்தார்கள் இப்போது அனுபவித்து கொண்டுள்ளனர் என ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.