சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி, தம்மம்பட்டி, வீரகனூர், ஏத்தாப்பூர் மற்றும் அயோத்தியாபட்டினம் பகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். 



மக்களின் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் அமர்ந்து 9 மாத காலம் ஆகிறது. ஒன்பது மாத காலமும் இருண்ட காலமாக உள்ளது. மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக விளங்கும் தமிழ்நாடு காவல்துறை, ஏவல் துறையாக மாறக் கூடாது. திமுகவின் கைப்பாவையாக மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் அனுபவிப்பீர்கள். கீழே இருக்கும் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். மேலே வரும் போது நிலைமை மாறும். முன்னாள் முதல்வர் பதவிக்காக ஆசைப்பட்டதில்லை. முதல்வராக இருந்தபோதும், முதல்வராக இல்லாத தற்போது நான் எப்பொழுதும் ஒரே மாதிரி தான் இருப்பேன். அடிமட்ட தொண்டனில் இருந்து முதல்வராகியவன் நான்.


திமுக சந்தர்ப்ப சூழ்நிலையில் ஆட்சி அமைந்துவிட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் சொந்த வேலைகளை பார்த்து வருகிறார். சைக்கிள் ஓட்டுதல், நடைபயணம், உடற்பயிற்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவைதான் 9 மாத கால திமுக ஆட்சியில் நாம் பார்த்த காட்சிகள். மிதிக்காமல், பேட்ரி சைக்கிளில் செல்கிறார் ஸ்டாலின், இதுவும் ஏமாற்று வேலை என மக்கள் சொல்கிறார்கள். தந்தையை போல் பத்து மடங்கு பொய் பேசுபவர் உதயநிதி ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரிந்த நீங்கள், அதிமுகவை ஏன் அழைக்கிறீர்கள். பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசும், உதயநிதிக்கு டாக்டர் பட்டமும் கொடுக்கலாம். திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பர அரசியல் செய்து வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார். 



மேலும் பேசிய அவர், “சேலத்தில் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நேருவிற்கு அந்த பேருக்கான தகுதி உள்ளதா? தில்லுமுல்லு செய்து சேலத்தில் வெற்றி பெற நினைக்கிறார். கேவலமாக இல்லையா இது; இதற்கு வேறு ஏதாவது பிளப்பு செய்யலாம். எதற்காக இந்த தேர்தலை நடத்தனும். அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படிதான் தேர்தல் நடத்தப்பட்டது. திமுகவினர் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக குறித்து விஷமத்தை பரப்பி வருகின்றனர். இதை மக்கள் நம்ப வேண்டாம்.


இந்திய நாட்டிலேயே தேர்தல் நேரத்தில் அதிக வாக்குறுதிகளை கொடுத்த கட்சி திமுக தான். 525 அறிவிப்புகள். அதில் 400 வாக்குறுதிகள் அதாவது, 70 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் காணொளி பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் அனைவரும் அதிமுக ஆட்சியை தான் விரும்புகின்றனர். சேலம் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று சேலம் அதிமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும்” என்றார்.