2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68 வது வயதில் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 


 


இந்நிலையில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு  தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியை அலங்கரித்த வயதான முதல்வர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்?


 


ராஜகோபால சாரி(74):




இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மெட்ராஸ் மாகாணத்திற்கு நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜகோபால சாரி முதலமைச்சராக பதவியேற்றார். 1878 ஆம் ஆண்டு பிறந்த ராஜகோபால சாரி 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி தனது 74ஆவது வயதில் முதலமைச்சராக பதவி ஏற்றார். 


 


மு.க.ஸ்டாலின் (68):




2021ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 1953ஆம் ஆண்டு பிறந்த மு.க.ஸ்டாலின் தனது 68ஆவது வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 


 


பக்தவச்சலம் (66):




1963ஆம் அக்டோபர் மாதம் காமராஜர் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பக்தவச்சலம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் மூன்றாவது முதலமைச்சராக பதவியேற்றார். 1897ஆம் ஆண்டு பிறந்த பக்தவச்சலம் தனது 66 ஆவது வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். 


 


ஜானகி(65):




1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு 14 நாட்கள் நெடுஞ்செழியன் முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னர் ஜனவரி 7ஆம் தேதி 1988ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி 24 நாட்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியில் இருந்தார். 1923ஆம் ஆண்டு பிறந்த ஜானகி தனது 65ஆவது வயதில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். 


 


எடப்பாடி கே.பழனிசாமி(63):




2016ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓ.பன்னிர்செல்வம் 72 நாட்கள் முதலமைச்சராக இருந்தார். அதன்பின்னர் அவர் தர்மயுத்தம் நடத்தி கட்சியிலிருந்து சற்று விலகி இருந்தார். அப்போது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். 1954ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 63ஆவது முதலமைச்சர் பதவி பெற்றார்.


 


எம்.ஜி.ஆர்(60):




1977ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். 1917ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 60ஆவது வயதில் முதலமைச்சராக பதவி ஏற்றார். 


 


சி.என்.அண்ணாதுரை(58):




1967ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு நடைபெற்ற 4ஆவது சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அண்ணாதுரை முதலமைச்சராக பதவியேற்றார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை சாராத முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இவருடைய ஆட்சி காலத்தில் மெட்ராஸ் மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயர் மாறிய போது முதல் முதலமைச்சர் இவர் தான். 1909ஆம் ஆண்டு பிறந்த சி.என்.அண்ணாதுரை தனது 58ஆவது வயதில் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.


 


கே.காமராஜர்(51):




மெட்ராஸ் மாகாணத்தில் ராஜாஜிக்கு பிறகு முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவர் காமராஜர். இவர் அதிகபட்சமாக தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்தார். 1903ஆம் ஆண்டு பிறந்த காமராஜர் தனது 51ஆவது வயதில் முதலமைச்சர் பதவியேற்றார். 


ஓ.பன்னீர்செல்வம்(50):




2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக நிதிமன்ற தீர்ப்பால் முதலமைச்சர் பதவியை இழந்தார். அப்போது அக்கட்சியின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் 2001ஆம் ஆண்டு முதல் 2002 ஆண்டு வரை 162 நாட்களுக்கு முதலமைச்சராக பதவி ஏற்றார். 1951ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 50ஆவது வயதில் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். 


 


நெடுஞ்செழியன்(49):




1969ஆம் ஆண்டு முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை பிப்ரவரி மாதம் மறைந்தார். அப்போது 7 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நெடுஞ்செழியன் பொறுப்பு ஏற்றார். அவர் தனது 49வது வயதில் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். 


 


கருணாநிதி(45):




அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுக கட்சியின் சட்டமன்ற தலைவராக 1969ஆம் ஆண்டு கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 45ஆவது வயதில் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் மொத்தமாக 18 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியில் இருந்தார். தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். 


 


ஜெ.ஜெயலலிதா(43):




தமிழ்நாட்டு வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தவர் ஜெ.ஜெயலலிதா தான். இவர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற 10ஆவது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவி பெற்றார். இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 14 ஆண்டுகாலம் பதவியில் இருந்தார். கருணாநிதிக்கு பிறகு அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.