Lok Sabha Election 2024: நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு என ஒரு எம்பி இருக்கும் வரை,  ஆர்டிகள் 370 திரும்ப கொண்டு வரப்படாது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.


ஆர்டிகள் 370 திரும்ப வராது - அமித் ஷா:


நியூஸ் 18 நெட்வொர்க்கிற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார். அதன்படி, ”எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வர மாட்டார்கள் அல்லது 370 வது பிரிவு மீண்டும் வர முடியாது. அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் அல்லது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவர்களால் ரத்து செய்ய முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு என கடைசியாக ஒரு எம்.பி., இருக்கும் வரையில், சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டுவர முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒழிக்க முடியாது. இப்போது பிரிவு 370 வரலாறாகிவிட்டது, குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு யதார்த்தமாகிவிட்டது.


சிஏஏ அடிப்படையில் குடியுரிமை - அமித் ஷா:


CAA திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரத் தொடங்கியுள்ளன. விதிகளின்படி ஆய்வு நடக்கிறது. மேலும் தேர்தலுக்கு முன், கடைசி கட்ட வாக்குப்பதிவிற்கு  முன், குடியுரிமை வழங்கும் செயல்முறை தொடங்கும் என்று நான் நினைக்கிறேன். கோவிட் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்துவது தாமதமானது.  CAA ஐ முதலில் அமல்படுத்த வேண்டும் என்று தங்களது கட்சி நம்புவதாகவும்" அமித் ஷா பேசியுள்ளார்.


மம்தா பானர்ஜி மீது விமர்சனம்:


மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசாங்கத்தையும் அமித் ஷா சாடினார். அதன்படி, ”குடியுரிமை என்பது மத்திய அரசை சார்ந்தது. அது மேற்கு வங்க அரசுக்கு தெரியாது.  அதற்கும் மாநில அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் சிறுபான்மையினரை தவறாக வழிநடத்த அவர்கள் இதைச் சொல்கிறார்கள். மம்தா ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாகப் பார்க்கிறார்” என்றும் அமித் ஷா சாடினார்.


பொது சிவில் சட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது - அமித் ஷா:


பொது சிவில் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஆணை என்றும், அதை செயல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது என்றும் அமித் ஷா பேசியுள்ளார். அதாவது, “சரியான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இதை நாங்கள் இன்று சொல்லவில்லை. எங்கள் கட்சி உருவாவதற்கு முன்பு நாட்டில் மதச் சட்டங்கள் இருக்கக் கூடாது, ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் இருந்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் முடியும்? இருக்கக் கூடாது" என்று அமித் ஷா பேசியுள்ளார்.