2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில், எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அத்துடன், சில தொகுதிகளில் போட்டியிட்ட  எதிரும், புதிருமாக உள்ள நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றியை அதிகம் எதிர்நோக்கியுள்ளனர். அந்த வகையில், கமல்ஹாசன் - வானதி சீனிவாசன், டிடிவி தினகரன் - கடம்பூர் ராஜூ, குஷ்பு - எழிலன், ஓ.பன்னீர்செல்வம் - தங்க தமிழ்செல்வன் ஆகியோர் இடையேயான போட்டியின் முடிவுகளை அறிய தமிழகம் காத்திருக்கிறது. 



கமல்ஹாசன் vs வானதி சீனிவாசன்




2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று தெரிந்தவுடன், அந்த தொகுதி அனைவராலும் பெரிதும் உற்றுநோக்கப்பட்டது. கமல்ஹாசன் இந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, வானதி சீனிவாசன்தான் இங்கு வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. ஏனென்றால், தமிழ்நாட்டில் ஓரளவு பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் கோவையும் ஒன்றாகும். கோவை தெற்கு தொகுதியில் கூடுதலாகவே பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கும். வானதி சீனிவாசன் 2011ல் மயிலாப்பூரிலும், 2016 கோவை தெற்கில் போட்டியிட்டுள்ளார். இரண்டிலும் தோல்வியையே தழுவினார். 2016ல் 33,113 வாக்குகள் பெற்றார்.




மூன்றாவது முறையாக போட்டியிடும் இவர், இம்முறை கட்டாயம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவரது நம்பிக்கைக்கு இடையூறாக அந்தத் தொகுதியில் கமல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுதான், பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. கடந்த தேர்தலில் இங்கு அதிமுகவின் அம்மன் அர்ச்சுனன் 59,788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருப்பதால், அவர்களின் வாக்குகள், தன்னுடைய செல்வாக்கை கொண்டு வரும் வாக்குகள் என கணக்குப்போட்டு இருந்த நிலையில், ஆலந்தூரில் போட்டியிடுவதாக கூறப்பட்ட கமல், இங்கு திடீரென வந்தது குதித்தது பெரிய ட்விஸ்ட் ஆக மாறியது. கமல் களமிறக்கப்பட்டதற்கும் ஒரு காரணம் உள்ளது. 



ஏனென்றால், 2019 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட மகேந்திரன் நல்ல வாக்குகளை பெற்றது ஒரு காரணமாகும். முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கமல் மீதும் இங்குள்ள மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அது பரப்புரையின் போதே அங்குள்ளவர்கள் கொடுத்த வரவேற்பு அதற்கு சாட்சியாகும்.


பரப்புரைக்காக கோவைக்கு சென்ற கமல், அங்கேயே தங்கி, கோவை தெற்கு தொகுதி மக்களிடம் மக்களோடு மக்களாக பழகிவந்தார். ஜாக்கிங், ஆட்டோவில் சென்று பரப்புரை மேற்கொள்வது என அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்தார். பதிலுக்கு வானதி சீனிவாசனும் ஆட்டோவில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.


துக்கடா அரசியல்வாதி என வானதி சீனிவாசனை கமல்ஹாசன் விமர்சிக்க, பதிலுக்கு உதட்டளவில் மட்டுமே கமல் சேவை செய்யக்கூடியவர் என்று வானதி கூற, அரசியல் களமே அப்போது சூடு பிடித்தது.


இந்தத் தொகுதி முழுக்க முழுக்க நகரப்பகுதி என்பதால் பலதரப்பட்ட சமூகத்தினரும் வசிக்கின்றனர். வடமாநிலத்தவர்களும் தொகுதி முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனர். 


வானதி சீனிவாசன், கமல்ஹாசன் இருவருமே இங்குள்ளவர்களுக்கு அறியப்பட்ட முகம் என்பதால், இந்தத் தேர்தலில் யார் ஜெயித்தாலும், தோற்றாலும் பெரியளவில் வாக்கு வித்தியாசம் இல்லாமல், நெருங்கத்தில் வந்தே வெற்றி, தோல்வியை சந்திப்பார்கள். கருத்துக்கணிப்புகளிலும் இந்தத் தொகுதி இழுப்பறி நிலையிலேயே இருக்கும் எனக் கூறப்பட்டது. இதனால், இந்தத் தொகுதியின் முடிவுகளை காண அனைவரும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.


 


 


கடம்பூர் ராஜூ - டிடிவி தினகரன்


2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ தொடர்ந்து இரண்டு முறை வென்றுள்ளார். இந்த முறையும் வென்றும் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுவிடலாம் என்று அவர் நினைத்திருந்த நிலையில், அவரே எதிர்பார்க்காத வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இங்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சீனிவாசனும் களத்தில் இருக்கிறார். இருப்பினும், கடம்பூர் ராஜூ - தினகரன் ஆகியோர் மட்டும்தான் எதிரும், புதிருமாக மக்கள் பார்க்கின்றனர். அதனால், அந்தத் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியது.
 


கோவில்பட்டி தொழில் நகரம் என்பதால், இங்கு எம்எல்ஏவை தீர்மானிப்பதில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடந்த முறை அவர்களின் ஆதரவு கடம்பூர் ராஜூவுக்கு இருந்ததால், இம்முறை அவருக்கே இருக்கும் எனக் கூறப்படுகிறது.  தினகரனை அவர்களால் எளிதில் அணுக முடியாது என்பதால் கடம்பூர் ராஜூவின் கையே அங்கு ஓங்கியுள்ளது.




ஆனால்,  2019ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு யூனியனில் அமமுக 10 வார்டுகளில் வெற்றி பெற்று யூனியன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. மேலும், இந்தத் தொகுதியில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் 23 சதவிகிதம் அளவுக்கு இருக்கின்றனர். இவையெல்லாம், தினகரனுக்கு தெம்பூட்டுவதாக உள்ளது, மேலும், அதிமுகவின் அதிருப்தி வாக்குகளும் அவருக்கு கிடைக்க  வாய்ப்புள்ளது. அத்துடன், தினகரனின் வலதுகரமாக இருக்கும் மாணிக்கராஜாவை நம்பி தினகரன் இங்கு களமிறங்கியுள்ளார். அமமுக உள்ளாட்சித் தேர்தலில் இங்கு வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே இவர்தான். கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த மாணிக்க ராஜாவுக்கு கோவில்பட்டியில் பரவலாக செல்வாக்கு உள்ளது. இதையெல்லாம், நம்பி தினகரன் இறங்கியிருந்தாலும், ஆர்.கே. நகரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தினகரன் ஒரு மேஜிக் செய்தார். அது, கோவில்பட்டியில் நிகழுமா?, கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ  ஹாட்ரிக் அடிப்பாரா? என்று இன்று தெரிந்துவிடும் மக்களே.


குஷ்பு - எழிலன்


ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இங்கு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.க.செல்வம் இங்கு வெற்றி பெற்றார். அவர், தற்போது பாஜகவின் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இங்கு பாஜக சார்பில் குஷ்புவும், திமுக சார்பில் டாக்டர் எழிலனும் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.


நடுத்தர வர்க்கம், படித்த மற்றும் பணக்காரர்கள் அதிகம் உள்ள தொகுதி ஆயிரம் விளக்கு. இங்கு அதிகம் திமுகவே வென்றுள்ளது. அதனால் திமுகவே இந்த முறை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால், பாஜக வேட்பாளராக குஷ்பு அறிவிக்கப்பட்ட பிறகு, நட்சத்திர தொகுதியாக மாறி, இந்த தொகுதியின் முடிவுகளை காண அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர். திமுக, காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்த குஷ்புக்கு உடனே எம்ஏல்ஏ சீட் கொடுக்கப்பட்டதும், அதுவும் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதும் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. 


2011 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக 8516 வாக்குகள் வாங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2016 தேர்தலில் வெற்றி வித்தியாசம் என்பது 8829 வாக்குகள் ஆகும். கிட்டத்தட்ட அந்த வாக்குகளைத்தான் பாஜக கடந்த முறை பெற்றிருந்தது. அதிமுக, பாமகவின் கூட்டணி ஆதரவுடன் இங்கு போட்டியிட்டால் அந்த வாக்கு வித்தியாசம் மாறி வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக களம் இறங்கி உள்ளது. அதன்படி தான் பாஜகவின் சார்பில் வலுவான வேட்பாளரான குஷ்பு, ஆயிரம் விளக்கில் களம் இறக்கப்பட்டுள்ளார்.





திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள டாக்டர் எழிலனும், அனைவருக்கும் பரிட்சயமானவரே. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்ப மருத்துவரான இவர், நீட், கூடங்குளம், ஈழத்தமிழர் பிரச்னை, நெடுவாசல் என அனைத்து சமூகப் பிரச்னைக்கு குரல் கொடுத்தவர். சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரின் தந்தை மு.நாகநாதன், கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்தியாவை திரும்பிபார்க்க வைத்த இலவச டிவிக்கு ஐடியா கொடுத்தவரே இந்த நாகநாதன். அவரின் வாரிசான எழிலனும் மக்களின் நம்பிக்கைக்குரியவராகவே உள்ளார்.


காவேரி மருத்துமனையின் பொது மருத்துவராக இருக்கும் எழிலன், தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது பணிக்கு திரும்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


டாக்டர், நடிகை என இருவரும் மக்களுக்கு தெரிந்த முகம் என்பதால், எப்போதும் திமுகதான் ஆயிரம் விளக்கில் வெற்றி பெறும் என்ற நிலையில், இம்முறை இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்கணிப்புகளில் இழுபறி நிலையே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டையாக மாறுமா? அல்லது முதல் முறையாக போட்டியிடும் குஷ்பு வென்று பாஜகவுக்கு வெற்றியை சமர்பிப்பாரா என்பதை காண காத்திருங்கள் நாளை வரை.



ஓபிஎஸ் - தங்க தமிழ்ச்செல்வன்



கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்காக ஒன்றாக பயணித்த ஓ.பன்னீர்செல்வம், தங்கத் தமிழ்ச்செல்வன் இம்முறை எதிரும், புதிருமாக களமிறங்கியுள்ளனர். இதனால், இந்தத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போடி தொகுதியில் 2011, 2016 தேர்தலில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மூன்றாவது முறையாக களத்தில் உள்ளார். இந்தத் தொகுதியில் ஓபிஎஸ் ஹாட்ரிக் அடிப்பார் என்று அறுதியிட்டு கூறி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக வைத்த ட்விட்ஸ்தான், போடியில் தங்கத் தமிழ்ச்செல்வனை வேட்பாளாராக களமிறக்கியது.




அதிமுகவில் இருந்து விலகி தினகரனின் அமுகவில் இணைந்த தங்கத் தமிழ்ச்செல்வன், அதன்பிறகு திமுகவில் இணைந்தார். இவர், ஆண்டிப்பட்டியில் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர். இருவருமே தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று, மூன்றாவது வெற்றிக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர். 


போடியில், முக்குலத்தோர் சமூக வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. இங்கு அமமுக சார்பில் முத்துசாமி போட்டியிடுகிறார். இங்கு தினகரனுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், இவர், இருவருக்கும் தொல்லை கொடுப்பவராக இருக்கிறார். அதனால், ஓபிஎஸ், தங்கத் தமிழ்ச்செல்வனை தவிர்த்து, முத்துசாமிக்கு அதிக வாக்குகள் விழுந்திருக்கும் என்பதால், அவரும் இந்த ரேஸில் இருக்கிறார் என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.


கடந்த முறை அதிமுக வெற்றிக்காக ஓபிஎஸ், தங்கத் தமிழ்ச்செல்வன், முத்துச்சாமி கடுமையாக உழைத்த நிலையில், அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், இம்முறை மூவரும் எதிர்க்கட்சி வேட்பாளாராக இருப்பதால், அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், தற்போது, தங்கள் ஆதரவாளர்களின் வாக்குகளை பெற்றிருப்பார்கள் என்பதால், இந்த தொகுதியில் இழுபறியே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரை விட, ஓபிஎஸ் நன்கு அறியப்பட்டவர் என்பதால், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.