திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கழகம் சார்பில் மாதேஷ்வரன் 4,54,990 வாக்குகள் பெற்று வெற்று பெற்றுள்ளார்.


மக்களவைத் தேர்தல் 2024:


நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கலில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மக்களவை தொகுதி: 


தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளில் 16வது தொகுதியாக உள்ளது நாமக்கல் மக்களவை தொகுதி. முன்னதாக 2008ம் ஆண்டு, ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தொகுதியை நீக்கி விட்டு புதிதாக நாமக்கல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. தற்போது இம்மக்களவை தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதன்படி சங்ககிரி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி - வேலூர், திருச்செங்கோடு அடங்கும். 


நாமக்கல் மக்களவை தொகுதி இதுவரை 3 மக்களவை தேர்தலை சந்தித்துள்ளது. இதில், அதிகபட்சமாக திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. அதாவது கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கொமதேக வெற்றி பெற்றது. 


இந்த முறை யார் யார் போட்டியிடுகிறார்கள்..? 


தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தல் 2024ல் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கழகம் சார்பில் மாதேஷ்வரன் போட்டியிட்டார். பாஜக சார்பில்  கே.பி.ராமலிங்கம், அதிமுக சார்பில் தமிழ்மணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமொழி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். 


தற்போதைய நிலவரத்தின்படி நாமக்கலில் கொமதேக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. 


கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றது யார்..? 


கடந்த 2019 மக்களவை தேர்தலில் 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 20 வேட்பாளர்கள் சுயேட்சை என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் கொமதேக கட்சியை சேர்ந்த ஏ. கே. பி. சின்ராஜ் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளராக நின்று , அதிமுக வேட்பாளரான காளியப்பனை 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 


வாக்காளர்கள் விவரம்: 


நாமக்கலில் மொத்தமாக 14,52,562 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் - 7,08,317, பெண்கள் - 7,44,087, மூன்றாம் பாலினத்தவர்கள் - 158 பேர்கள் உள்ளனர். அதில் மக்களவை தேர்தலில் வாக்களித்தவர்கள் 11,36,069 பேர் மட்டுமே ஆகும். அதில், ஆண்கள் - 5,53,702, பெண்கள் - 5,82,290, மூன்றாம் பாலினத்தவர்கள் - 77 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன்மூலம், 78.21% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.