Mizoram Election Result 2023: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தற்போது சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட மாநிலங்கள் என்றால் அது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் என மொத்தம் 5 மாநிலங்களுக்கு நடத்தப்பட்டது. இன்று மிசோரத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிற்பகலுக்குப் பின்னர் மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் லால்துஹோமா முதலமைச்சராக பதியேற்கவுள்ளார். 


இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. மிசோரத்தினைப் பொறுத்தவரையில் மாநிலக் கட்சிகளான மிசோரம் தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் என இந்த இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மிசோரம் தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. ஜோரம் மக்கள் இயக்கம் எதிர்க்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. 


இம்முறை ஆட்சிக்கு ஜோரம் மக்கள் இயக்கம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையேதான் தேர்தல் கணிப்புகளும் கூறியது. இந்நிலையில் இன்று காலை தொடங்கிய வாக்குப் பதிவு மிகவும் பரபரப்பாக தொடங்கிது. தேர்தல் கணிப்புகள் கூறியதைப் போலவே ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த மிசோரம் தேசிய முன்னணி 7 இடங்களில் வெற்றியும் 3 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. பாஜக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கின்றது.