திருச்சி பிரச்சாரத்தில், அமைச்சர் கே.என்.நேருவும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நேரில் சந்தித்து ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக என்ன நடந்தது, எச்.ராஜா என்ன பிரச்சாரம் செய்தார் என்பதை பார்த்து விட்டு, இந்த செய்திக்கு வருவோம்...
‛நாங்கள் ஒன்றிய அரசு என்றால்... திமுக மனநலம் குன்றிய அரசு’
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக வாகனத்தில் இருந்தபடியே எச் ராஜா பேசினார் அப்போது அவர் பேசுகையில்...
‛‛திமுக ஆட்சி காலத்தில் ரவுடித்தனம் செய்தார்கள், கோயில்களை இடிக்கிறார்கள் என அதிமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள். அதிமுக எப்பவுமே வாயை மூடிக் கொண்டு இருப்பதால் மீண்டும் திமுகவிற்கு வாக்கு அளித்தார்கள். கடந்த 55வருடங்களாக இப்படி மாறி மாறி இவர்கள் ஆட்சி செய்து உள்ளார்கள், தர்மத்தைக் காக்க இந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக அரசு செயல்படுகிறது. தமிழக அரசின் நிர்வாகம் முழுவதும் மதமாற்றும் நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்துக் கோயில்கள் அனைத்தும் இடிக்க படுகிறது. 1967இல் இருந்து வந்த தீயசக்திகள் இந்துக்களுக்கு மட்டுமே எதிராக செயல்படுகிறது. 1000க்கும் மேற்பட்ட சர்ச்சுகள் மசூதிகள் நீர்நிலைகளில் உள்ளது . அதை முடிந்தால் அப்புறப்படுத்தவும்.
இந்த திமுக சர்க்கார், அவல சர்க்காராக செயல்படுகிறது. இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். வெறும் இரண்டரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளீர்கள். தூக்கி எறிய வெகு நாள் ஆகாது. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது மக்களை ஏமாற்றும் செயல். மக்கள் ஏமாற மாட்டார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி என்று சொன்னார். அதை நம்பி வாக்களித்தார்கள். தற்பொழுது ஏமாந்து வட்டி கட்டி வருகிறார்கள். திமுக அரசை இனி மனநலம் குன்றிய அரசு என்று அழையுங்கள். நீங்கள் ஒன்றிய அரசு என்று சொல்லும் பொழுது, நாங்கள் மனநலம் குன்றிய அரசு என்று தான் சொல்வோம். இனி சமூக வலைத்தளங்களில் அப்படியே பதிவு செய்யுங்கள்.
ஊழலும், திமுகவும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். அதிலிருந்து அவர்களை பிரிக்க முடியாது. பொங்கல் பரிசு வழங்கிய 1500 கோடியில் 500 கோடி ரூபாய் கொள்ளையடித்து உள்ளார்கள். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத காரணத்தினால் தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடித்து வருகிறார்கள்.
மேலும் 27மாதங்களாக கொரோனா பரவலால் வீட்டிலேயே முடங்கி இருந்தோம். தடுப்பூசி மூலம் நம்மை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அவருக்கு நன்றி தெரிவிக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம் என நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லி உள்ளார். என எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. மோடி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால் தேங்க்யூ மோடி தேங்க்யூ மோடி என சொல்லிக்கொண்டே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள். மோடிக்கு போய் சேரும்,’’ என்று எச்.ராஜா பேசினார்.
அதன் பின் அடுத்தடுத்து பிரச்சாரம் செய்ய அங்கிருந்து நகர்ந்த போது, திமுக வேட்பாளரை ஆதரித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது, நேருவும்-ராஜாவும் வாகனத்தை விட்டு இறங்கி, ஒருவரை ஒருவர் நட்பு பாராட்டி, நலம் விசாரித்தனர். அத்தோடு பாஜக வேட்பாளரிடமும் நேரு நலம் விசாரித்து, பிரச்சாரத்தை பற்றி கேட்டறிந்தார்.
சுடச்சுட பிரச்சாரத்தில் தாக்கி பேசிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் நேரெதிர் கட்சியை சேர்ந்த இரு முக்கியஸ்தர்கள், ஒன்றாக நட்பு பாராட்டிக் கொண்டதும், இருகட்சி தொண்டர்களும், வேட்பாளர்களும் ஒரே இடத்தில் கூடியிருந்ததும், பார்க்க ரம்யமாக இருந்தாலும், இதில் எது உண்மை என்கிற குழப்பம் வாக்காளர்களுக்கு இல்லாமல் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்