கோவை மாநகராட்சியில் 97 வது வார்டு வேட்பாளராக திமுக சார்பில் நிவேதா என்பவர் போட்டியிடுகின்றார். இவர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதியின் மகள். திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 22 வயதான இளம் வேட்பாளரான நிவேதா, கோவை மாநகராட்சியின் அக்கட்சியின் மேயர் பதவிக்கான போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அப்பகுதியில் நிவேதா வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் மீது அதே வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நிரஞ்சனா தேவி என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் புகார் மனு அளித்தார். அதில் தேர்தல் விதிகளை மீறி செயல்படும் திமுக வேட்பாளர் நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இது குறித்து சுயேச்சை வேட்பாளர் நிரஞ்சனா தேவி கூறும் போது, “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 97 வது வார்டில் திமுகவினர் வரம்பு மீறி செயல்படுகின்றனர். திமுக வேட்பாளர் நிவேதா மாவட்ட செயலாளர் சேனாதிபதியின் மகள் என்பதால் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 97 வது வார்டில் மட்டும் ஏராளமான வாகனங்கள் தேர்தல் பணிக்காக சுற்றி வருகின்றன. அந்த வார்டில் உள்ள வாக்காளர்களுக்கு குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் கொடுப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சுயேச்சை வேட்பாளரை விலைக்கு வாங்கி, அவரது பரப்புரை வாகனத்தில் நிவேதா உருவபடம் பொறித்த பேனர்களை கட்டி நிவேதாவிற்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்து வருகின்றனர். 97 வது வார்டில் மட்டும் 3 கோடி ரூபாயை தாண்டி திமுகவினர் செலவு செய்து இருக்கின்றனர். அதனால் தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே 97 வது வார்டில் மட்டும் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நிரஞ்சனா தேவி மற்றும் அவரது கணவர் விஜயகுமார் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். 97 வது வார்டை திமுகவிற்கு ஒதுக்கியதால் அதிருப்தியடைந்த நிரஞ்சனா தேவி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் கட்சி கட்டுப்பாட்டுகளை மீறி தேர்தலில் போட்டியிட்டதால் நிரஞ்சனா தேவியும், அவருக்கு துணையாக விஜயகுமார் செயல்பட்டு வருவதாகவும் கூறி, இருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அவர்களுக்கும் இந்த சம்மந்தமும் இல்லை எனவும், கட்சியினர் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அக்கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சுந்தரம் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் மீது புகார் அளித்த மறுநாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.