மயிலாடுதுறை நகராட்சி 32 வது வார்டு சின்னக்கடை தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் 39 வது வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது. இங்கு 2375 வாக்காளர்கள் உள்ள நிலையில், வாக்கு சதவீதம் கணக்கிடு செய்வதற்காக பார்த்த போது 439 வாக்குகள் பதிவாகியுள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 478 வாக்குகள் பதிவானதாக காண்பித்துள்ளது. இதனை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சோதனை செய்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 39 வாக்குகள் கூடுதலாக பதிவானது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும், மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சில வேட்பாளர்கள் கூறியதால் வேட்பாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டு, வாக்குச்சாவடியில் தேவையில்லாதவர்களை வெளியேற்றினர்.
தொடர்ந்து மயிலாடுதுறை தேர்தல் பார்வையாளர் கோட்டாட்சியர் பாலாஜி, தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான பாலு சம்பவ இடத்திற்கு வந்து வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேட்பாளர்கள் சிலர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறான எண்ணிக்கையையும், தவறான நேரத்தையும் காண்பிப்பதால் மறு வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் வேட்பாளர்கள் சமாதான அடைந்ததை அடுத்து, இதுவரை பதிவான வாக்குகள் உடன் அந்த வாக்கு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் புது இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீதம் உள்ள வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியது. சுமார் இரண்டு மணிநேர தாமதத்திற்குப் பின் வாக்கு பதிவு தொடங்கியதை அடுத்து வாக்காளர்கள் வெகு நேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அந்த வாக்கு சாவடி மையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் இது குறித்து தேர்தல் அலுவலர்கள் சிலர் கூறுகையில் காலையில் வாக்கு பதிவு தொடங்கும் முன்பு நடைபெறும் மாதிரி வாக்குபதிவை சரியாக நீக்காமல் அலுவலர்கள் கவனக்குறைவாக செய்யும் தவறால் சில சமயங்களில் இது போன்று பதிவிவான வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் கணக்கு காட்டும் நிகழ்வு நடைபெறும் என்றும், இது கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் இன்னும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பாடம் கற்காமல் இருந்து வருகின்றனர் என குற்றம் சாட்டினர்.