தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெறுதல் அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் தீவிர பிரச்சாரம் என தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டி காணப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வான வாக்கு பதிவு தமிழகம் முழுவதும்  இன்று காலை தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்ட  மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும்.  இந்த தேர்தலில் 72 ஆயிரத்து 846 ஆண்கள்,  77 ஆயிரத்து 77 பெண்கள் மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 938 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 123 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்கள் என 596 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 



மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இன்று நடைபெறும் வாக்குப் பதிவிற்காக மாவட்டம் முழுவதும் 177 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 



இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகள் உள்ளன.  காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10 வது வார்டு கவிஞர் வேதநாயகம் நகராட்சித் தொடக்கப்பள்ளியில் மூன்று வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில்  வாக்குச்சாவடி எண் 12ட- இல் ஈவேரா தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி  செல்வி (55) என்ற பெண் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தான் வாக்குக் செலுத்தவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். 




பின்னர், அவரது உறவினர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் மற்றும்  அதிமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் சரியாக அச்சிடப்படவில்லை என்றும் மேலும் வருபவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவதால் யார் என்று தெரியவில்லை என்று முகவர்கள்  மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்மணிக்கு மாற்று ஓட்டு வழங்கப்பட்டது. Section 49P in The Conduct of Elections Rules, 1961 ன்படி தனது ஓட்டை யாராவது போட்டிருந்தால், தனது அடையாளத்தைக் நிரூபித்து, ஓட்டிற்குச் சொந்தக்காரரான உண்மையான நபர் வாக்களிக்கலாம் அதனை பயன்படுத்தி தனது வாக்கினை செலுத்தினார்.  இப்படிப் போடப்பட்ட ஓட்டுக்களை “Tendered Votes" என்று அழைக்கப்படும். இதனால் 20 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.