நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெரியகுளம் , சின்னமனூர், உட்பட்ட பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 506 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில் 731 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்த கணினி குலுக்கல் முறையில் 886 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் இன்று நடந்து வருகிறது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, 5 பேரூராட்சிகளில் மொத்தம் 8 பேர் வார்டு கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனால் 478 பதவிகளுக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இதையொட்டி 894 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 894 கட்டுப்பாட்டு எந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்டு தேர்தலுக்கான வாக்குபதிவு நடந்து வருகிறது. இந்த தேர்தல் கடந்த 10 வருடத்திற்கு பின்பு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்க நிலையில் இன்று அதிகாலை முதலே வாக்கு சாவடிகளில் வாக்களிக்க வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர். பெரிகுளம் , கம்பம், ஆண்டிபட்டி, போடி பகுதிகளில் உள்ள பல்வேறு வாக்கு சாவடிகளில் மாற்று திறனாளிகள் மற்றும் வயதானோர்களுக்கு வாக்களிக்க அவர்களுக்கான முன்னேர்பாடுகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்