தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 286 மனுக்கள் ஏற்கப்பட்டது. சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 147 மனுக்கள் ஏற்கப்பட்டன. குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 118 மனுக்களும் இதேபோன்று மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 101 மனுக்களும் ஏற்கப்பட்டன. தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 105 மனுக்களும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 81 வேட்புமனுக்களும் எவ்வித நிராகரிப்பு இன்றி அனைத்தும் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்த நிலையில் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் களம் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மொத்த 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதிவிக்கு போட்டியிட 105 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, பாஜக, அமமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை உள்ளிட்ட 41 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இந்த சூழலில் நேற்று மாலை கடைசி நேரத்தில் தரங்கம்பாடியில் உள்ள 3,4,5 வது வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் 3 வது வார்டில் திமுக வேட்பாளர் நீலமேகம், 4 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ரவி, 5 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலகண்ணன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.