சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாகத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், மத்தியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் இணைந்து பிரம்மாண்ட கொடி அணிவகுப்பை நடத்தினர்.

Continues below advertisement

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வர உள்ளது. இந்த நிலையில், பதற்றமான பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களில் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தவும், சமூக விரோதச் செயல்களைத் தடுக்கவும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்காளர்கள் எவ்விதத் தூண்டுதலுக்கோ அல்லது மிரட்டலுக்கோ ஆளாகாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்தியப் பாதுகாப்புப் படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சீர்காழி நகரமே அதிரும் வகையில் இந்தப் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது.

Continues below advertisement

அணிவகுப்பு தொடக்கம் மற்றும் வழித்தடம்

சீர்காழி உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் இணைந்து நடத்திய இந்த அணிவகுப்பு, புகழ்பெற்ற தாடாளன் பெருமாள் கோயில் முன்பிருந்து தொடங்கியது. இந்த அணிவகுப்பிற்கு சீர்காழி டி.எஸ்.பி. சரவணன், மத்திய பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் தர்ஷன் சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், ஆணைக்காரன் சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜா, மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அணிவகுப்பு சென்ற பாதைகள்

* தாடாளன் பெருமாள் கோயில் (தொடக்கம்)

 * கொள்ளிடம் முக்கூட்டு

 * பிடாரி வடக்கு வீதி

 * பழைய பேருந்து நிலையம்

 * அரசு மருத்துவமனை சாலை

 * கச்சேரி சாலை

 * தென்பாதி

 * விவேகானந்தா பள்ளி (நிறைவு)

முக்கிய வணிக வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் வழியாகச் சென்ற இந்த அணிவகுப்பு, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

படை பலம்

இந்த அணிவகுப்பில் பாதுகாப்புப் படையினர் தங்களது சீருடையில், ஆயுதங்களுடன் மிடுக்காக நடந்து சென்றனர். இதில் மத்திய பாதுகாப்புப் படையினர் 60 பேர்,

தமிழ்நாடு சிறப்பு காவல் படை, போக்குவரத்து பிரிவு மற்றும் ஊர்க்காவல் படையினர் 75 பேர் என மொத்தம் 135 

வீரர்கள் அணிவகுத்துச் செல்ல, அவர்களுக்குப் பின்னால் காவல்துறையின் ரோந்து வாகனங்கள் மற்றும் அவசர கால வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. இது நகரப்பகுதியில் ஒரு போர் மேகச் சூழலைப் போன்ற பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் வரவேற்பு

காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்துச் சீர்காழி பகுதி மக்கள் கூறுகையில், "தேர்தல் சமயத்தில் இதுபோன்ற அணிவகுப்புகள் நடப்பது எங்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. எவ்விதப் பயமுமின்றி நாங்கள் வாக்களிக்கச் செல்ல இது ஒரு உந்துதலாக இருக்கிறது," எனத் தெரிவித்தனர்.

இந்த அணிவகுப்பின் மூலம், தேர்தல் நேரத்தில் வன்முறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையை மாவட்டக் காவல்துறை விடுத்துள்ளது. சீர்காழி மட்டுமன்றி மயிலாடுதுறை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் வரும் நாட்களில் இத்தகைய அணிவகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.