தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதிக்கு என ஏதேனும் ஒரு தனி வரலாறு இருந்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வரலாறு உள்ளது.
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி கடந்த ஒர் ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைமை இடமாக உள்ள தொகுதி. மயிலாடுதுறை மாவட்டம் 2020-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் இதுவரை உறுப்பினராக இருந்தவர்கள்
2016 அதிமுக வீ.ராதாகிருஷ்ணன்,
2011 தேமுதிக பால.அருட்செல்வன்,
2006 காங்கிரஸ் எஸ்.ராஜகுமார்,
2001 பாஜக ஜெக.வீரபாண்டியன்,
1996 த.மா.கா சார்பில் எம்.எம்.எஸ்.அபுல்ஹசன்,
1991 காங்கிரஸ் சார்பில் எம்.எம்.எஸ்.அபுல்ஹசன்,
1989 திமுக செங்குட்டுவன்,
1984 அதிமுக தங்கமணி,
1984 திமுக இடைத்தேர்தல் சத்தியசீலன்,
1980 திமுக கிட்டப்பா,
1977 திமுக கிட்டப்பா,
1971 திமுக கிட்டப்பா,
1967 திமுக கிட்டப்பா,
1962 காங்கிரஸ் தியாகி, ஜி.நாராயணசாமி நாயுடு,
1957 காங்கிரஸ் தியாகி, ஜி.நாராயணசாமி நாயுடு.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய ஒரு சுவாரஸ்யமான வரலாறு என்னவென்றால், 1957 மற்றும் 1962- ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாராயணசாமி நாயுடு சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலம் முடிந்து பின்னர் ஜனதா கட்சிக்கு மாறினார். இது போன்று 1967, 1971, 1977, 1980 என நான்கு முறை திமுக சார்பில் வெற்றி பெற்ற கிட்டப்பா பின்னாளில் அதிமுக விற்கு மாறினார்.
1984- இல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்கமணி திமுகவிற்கும், 1989-இல் திமுக சார்பில் வெற்றி பெற்ற செங்குட்டுவன் மதிமுகவுக்கும், 1991-இல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், 2001-இல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வெற்றி பெற்ற ஜெக.வீரபாண்டியன் திமுகவிற்கு, 2011-இல் தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற அருள்செல்வன் திமுகவிற்கு மாறியுள்ளனர்.
இதில், திமுக சார்பில் 1984 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியசீலன் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பாக 2006-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ராஜகுமார் ஆகிய இருவர் மட்டும் இதுவரை கட்சி மாறாத எம்எல்ஏக்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முடிவு வரப்போகிறது. யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை கடந்து, யார் கட்சி மாறப்போகிறார்கள் என்கிற நகைப்பான எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் இல்லாமல் இல்லை. கடந்த காலங்களை ஒப்பிடும் போது வரலாறு முக்கியமாச்சே.