Manmohan Singh Letter: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல், நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மன்மோகன் சிங் எழுதிய உருக்கமான கடிதம்: 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இறுதி கட்ட தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் கடிதத்தை எழுதியுள்ளார்.
நாட்டை காக்க கிடைத்துள்ள இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. "பணமதிப்பிழப்பு பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி), மற்றும் கரோனா பெருந்துதொற்றின் போது தவறான நிர்வாகம் ஆகியவை ஒரு பரிதாபகரமான சூழ்நிலையை விளைவித்துள்ளன. ஆறு முதல் ஏழு சதவிகிதம் வரை வளரும் என எதிர்பார்க்கப்படும் குறைவான ஜிடிபி வளர்ச்சி புதிய இயல்பாக மாறியுள்ளது.
பாஜக அரசாங்கத்தின் கீழ் சராசரி ஜிடிபி வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அது சுமார் எட்டு சதவீதமாக இருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள வேலையின்மை, கட்டுப்பாடற்ற பணவீக்கம் ஆகியவை சமத்துவமின்மையை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. அது இப்போது 100ஆண்டு உச்சத்தில் உள்ளது.
"தியாக உணர்விற்கு பெயர் பெற்ற பஞ்சாப்" சவால்கள் இருந்தபோதிலும், நமது மக்களின் வாங்கும் சக்தியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அதிகரித்தது. அதே நேரத்தில், பாஜகவின் தவறான ஆட்சியால் குடும்ப சேமிப்புகள் 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை ஏற்படுத்தியது.
2022/23 நிதியாண்டில் குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு 14.2 டிரில்லியன் ரூபாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவீதமாக சரிந்தது" என கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து குறிப்பட்ட மன்மோகன் சிங், "நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களின் நாடு தழுவிய போராட்டம் உலகளவில் தலைப்புச் செய்தியாகி, மூன்று சர்ச்சைக்குரிய சட்டங்களைத் திரும்பப் பெற பாஜகவை கட்டாயப்படுத்தியது. மத்திய அரசை விவசாயிகள் போராட்டம் நடுங்க வைத்தது.
லத்திகளும், தோட்டாக்களும் போதாது என்பதால் நாடாளுமன்றத்தில் வைத்து 'ஒட்டுண்ணிகள்' என்று நம் விவசாயிகளை வாய்மொழியாகத் தாக்கினார் பிரதமர். 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி உறுதியளித்தார்.
(ஆனால்) கடந்த 10 ஆண்டுகளில் அவருடைய கொள்கைகள் வருவாயைக் குறைத்துவிட்டன. விவசாயிகளின் தேசிய சராசரி மாத வருமானம் ஒரு நாளைக்கு 27 ஆக உள்ளது. அதே சமயம் ஒரு விவசாயியின் சராசரி கடன் ரூபாய் 27,000 (அரசு தரவுகளிலிருந்து) ஆக உள்ளது.
பஞ்சாபும் பஞ்சாபியர்களும் போர்வீரர்கள். நாம் நமது தியாக உணர்விற்கு பெயர் பெற்றவர்கள். பஞ்சாப், பஞ்சாபிகள் மற்றும் பஞ்சாபியத்தை அவமானப்படுத்த பாஜக அனைத்து வேலைகளையும் செய்கிறது" என்றார். பிரிட்டிஷ் இந்தியாவில் ஒருங்கிணைந்த பஞ்சாபில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.