சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மான் முட்டியதில் வனக்காப்பாளர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வனவிலங்கு காப்பாளராக பணியாற்றி வரும் தமிழ்செல்வன் இன்று வழக்கம் போல மான்களுக்கு உணவு வழங்கியுள்ளார். அப்போது திடீரென கடமான் முட்டியதில் தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பணியாளர் முருகேசன் என்பவர் தமிழ்செல்வனை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மான் முட்டியது.
இதையடுத்து சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். முருகேசனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியின்போது வன அலுவலர் மான் முட்டி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கோடை காலம் என்பதால் மான்களுக்கு முட்டைகோஸ், தர்பூசணி உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி மதியம் விலங்குகளுக்கு ஐந்து வனக்காப்பாளர்கள் உணவளிக்க செல்வார்கள். அப்போது மூன்று பேர் வனக்காப்பாளர்கள் பாதுகாப்புக்காகவும், இருவர் உணவளிக்கவும் செல்வார்கள். அதே போன்று இன்று உணவளிக்க சென்றபோது கடாமான் தமிழ்ச்செல்வனை தாக்கியுள்ளது. உடனடியாக அருகில் இருந்த முருகேசன், தமிழ்ச்செல்வனை காப்பாற்றுவதற்காக சென்று உள்ளார். அப்போது மான் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அங்கிருந்து மற்ற வனக்காப்பாளர்கள் மானை விரட்டி இருவரையும் மீட்டு வந்துள்ளனர். மானின் மனநிலை கோவமாக இருந்ததால் இது போன்ற தாக்குதலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் வனக்காப்பாளர்கள் பாதுகாப்புடன் தான் உள்ளே செல்வார்கள். இன்று எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்து விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.