மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.


மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். அங்கு திரிணாமுல் 187 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை கண்டுள்ளார். சுவேந்து அதிகாரி கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.


தென்னிந்தியாவில் தமிழகத்தைப் போல, கிழக்கு இந்தியாவில் பா.ஜ.க.விற்கு சவாலான மாநிலமாக விளங்குவது மேற்கு வங்கம். 1998-இல் திரிணாமுல் காங்கிரசை தொடங்கிய மம்தா பானர்ஜி தனது தீவிர பரப்புரையாலும், கள வியூகங்களாலும் மேற்கு வங்கத்தை அதுவரை ஆண்டுகொண்டிருந்த மார்க்சிஸ்டுகளிடம் இருந்து 2011-ஆம் ஆண்டு முதல்முறையாக கைப்பற்றினார். தனது சிறப்பான நிர்வாகத்திலும், மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையாலும் 2016-ஆம் ஆண்டு மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலில் மட்டும் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 42 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. சி.பி.எம். கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களை கைப்பற்றியது.


அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி 11 இடங்களையும், புரட்சிகர சோசியலிச கட்சி 7 இடங்களையும், சமாஜ்வாதி, டெமாக்ரடிக் சோசியலிஸ்ட் கட்சி தலா 1 இடங்களையும், கோர்கா ஜன்முக்தி மோர்சா 3 இடங்களையும், சோசியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா(கம்யூனிஸ்டு) 1 இடத்தையும், சுயேட்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர். பா.ஜ.க. வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களில் கைப்பற்றிய பா.ஜ.க. இந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது. 2016 முதல் 2021 வரையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் தற்போது 15 இடங்களை பா.ஜ.க. தன் வசம் வைத்துள்ளது.