இந்தியாவில் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலின் முடிவுகளானது ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மக்களவை தேர்தலானது, மொத்தமாக 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தலானது நிறைவடைந்துள்ளது. இன்று 5வது கட்ட தேர்தல் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்றது.
வாக்கு இயந்திரத்துக்கு மாலை:
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரின் செயலானது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நாசிக்கைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் சாந்திகிரி மகாராஜ், வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மாலை அணிவித்தார். இந்த சம்பவத்தையடுத்து, காவல்துறையினர் அவர் மீது FIR பதிவு செய்தனர்.
இந்த வீடியோவானது, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. X (ட்விட்டர்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவுக்கு, பலரும் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதில் பயனர் தெரிவிக்கையில், ”எப்படி வாக்கு செலுத்தும் மையத்துக்குள் மாலையை கொண்டு செல்ல தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர்” என்றும் மற்றொரு பயனர் தெரிவிக்கையில், ”எப்படி வாக்குச்சாவடி மையத்தில் வீடியோ எடுக்க முடிந்தது” எனவும் கேள்வி எழுப்பினர். சிலர், தேர்தல் சமயத்தில், இதுபோன்ற நகைச்சுவை, தேர்தலை விறுவிறுப்பாக வைத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
5 ஆம் கட்ட தேர்தல்:
இந்த நிலையில், 5வது கட்டமாக, இந்தியாவில் உள்ள பல தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள 35 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் மட்டும் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருந்தனர். இவர்களில் 4.69 கோடி பேர் ஆண் வாக்காளர்களாகவும், 4.26 கோடி பேர் பெண் வாக்காளர்களாகவும், 5 ஆயிரத்து 409 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களாகவும் உள்ளனர்.
5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர, ஜம்மு – காஷ்மீர், லடாக் ஒன்றிய பிரதேசங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நான்காம் கட்ட தேர்தலில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், இன்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 56.68 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.