பாஜக முகவரால் ஹிஜாபை கழட்ட சொன்ன மேலூர் நகராட்சி 8 வது வார்டில், திமுக நகரச் செயலாளர் யாசீன் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து நின்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்!
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8 ஆவது வார்டு அல் அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக கடந்த சனிக்கிழமை இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்தார். அப்போது அவரின் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கிரிதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு வாக்குப் பதிவும் நிறுத்தப்பட்டது. பெண் வாக்களரிடம் பாஜக முகவர் ஹிஜாப்பை அகற்றச்சொன்னதால் திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி முகவர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழகம் முழுவதும் இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண்ணிடம் தகராறு செய்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜக முகவர் கிரிதரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக பாஜக முகவர் கிரிதரன் செய்ததில் எந்த தவறும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு பாஜகவினர் தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக முகவரால் ஹிஜாபை கழட்ட சொன்ன மேலூர் நகராட்சி 8 வது வார்டில், திமுக நகரச் செயலாளர் யாசீன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்