மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.வும் பா.ம..க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


ஓ.பி.எஸ். நிலைப்பாடு என்ன?


இந்த சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க.வும் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்தால் அ.தி.மு.க. கட்சி, சின்னத்தை மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை:


இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்பில் ”கூட்டணி தொடர்பாக முடிவு எட்டப்பட்டவுடன் அனைத்து விவரங்களையும் நானே தெரிவிப்பேன். மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வதந்திகள் பரப்பப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.


ஓ.பன்னீர்செல்வம் தொடக்கம் முதலே பா.ஜ.க.வுடன் நெருக்கமான உறவு கொண்டு வருகிறார். ஆனால், பா.ஜ.க.வினர் கட்சியும், சின்னத்தையும் தன் வசம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியுடனே கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வந்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று கூறி வருகின்றனர்.


என்ன செய்யப்போகிறார்?


தற்போது, ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும் அவரது ஆதரவாளர்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்? அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாகவே, அவர் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. தோற்றாலும். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். இதனால், நடப்பு மக்களவைத் தேர்தலிலும் ஓ.பி.ரவீந்திரநாத்தை எம்.பி.யாக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவே ஆர்வம் காட்டி வரும் சூழலில், நடப்பு மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார்? அவர் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்? என்பதை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: PM Modi Speech: "தி.மு.க. தமிழ்நாட்டின், தமிழ் பண்பின் எதிரி" : பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு


மேலும் படிக்க: Lok Sabha Election 2024 Date: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு- தேர்தல் ஆணையம்