மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் சில மாநில சட்டசபைகளுக்கான தேதி அறிவிப்பானது, நாளை மதியம் 3 மணிக்கு தெரிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மக்களவை தேர்தல்:
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான உறுப்பினர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலானது அடுத்த மாதம் நடைபெறும் என கூறப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.அரசியல் கட்சிகள், தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளிலும், கூட்டணி கட்சிகளை உறுதி செய்யும் பணிகளிலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக கட்சி 2 கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. முதல கட்டத்தில் 195 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலையும், 2 ஆம் கட்ட பட்டியலில் 72 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகியது. இந்தியா கூட்டணி சார்பில் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும், 2வது கட்டமாக 43 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகின.
தேர்தல் தேதி அறிவிப்பு:
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பான அறிவிப்பானது தேர்தல் ஆணையம் மூலம் வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை மதியம் 3 மணிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி குறித்தான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாநில சட்டசபை தேர்தல் குறித்தான தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைக்கான தேர்தல் குறித்தான அறிவிப்பும் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
நடத்தை விதிமுறைகள்:
இதையடுத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், எந்தவொரு புதிய திட்டத்தையும் அரசாங்கம் அறிவிக்க கூடாது.
தேர்தல் தேதியன்று, வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அரசியல் கட்சிகளின் கொடிகள் பறக்கவிட கூடாது
எந்தவொரு வீட்டின் முன்பும் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்ட கூடாது.
எந்த ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ, வெறுப்பை உண்டாக்கும் வகையிலோ அல்லது சாதி, மதம் அல்லது மொழியியல் ஆகியவற்றுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது
இந்தியாவில் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் நோக்கில், இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை அரசியல் கட்சிகள் மீறினால் நடவடிக்கையும், தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படும்.