நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல்முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில், பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்காரி அமோக வெற்றி பெற்றார்.
பேத்திகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட நிதின்கட்காரி:
நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நிதின் கட்காரி அதே தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக அந்த தொகுதியின் எம்.பி.யாக வெற்றி பெற்று அசத்தியுள்ளார். நிதின் கட்காரி வெற்றி பெற்றதை முன்னிட்டு, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பா,ஜ.க.வின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரான நிதின் கட்காரிக்கு மத்திய அமைச்சரவையிலும் கண்டிப்பாக இடம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நிதின் கட்காரியின் பேத்திகள் அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நிதின் கட்காரியின் மனைவி கஞ்சன் கட்காரியுடன் காரில் இருந்து வந்திறங்கும் மூன்று பேத்திகளும் நிதின் கட்காரியை பார்த்தவுடன் ஓடிச்சென்று கட்டியணைத்துக் கொண்டனர். தனது பேரக்குழந்தைகளை பார்த்தவுடன் நிதின் கட்காரியும் மகிழ்ச்சியில் வாரி அணைத்துக் கொண்டார்.
நாட்டின் அழகான மாசற்ற நகரம்:
நிதின் கட்காரி நாக்பூர் தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 603 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் தனது மனைவி மற்றும் தனது பேரன், பேத்திகளுடன் இணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாக்பூர் தொகுதி மக்களுக்கு நிதின் கட்காரி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டிலே மிகவும் அழகான தூய்மையான, மாசற்ற நகரமாக நாக்பூரை மாற்றுவதே தனது கனவு என்றும், அதற்காக உழைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
350க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. கூட்டணி 290 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் அளித்த ஆதரவுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
மேலும் படிக்க: Exclusive: தயாராகும் மோடி 3.0 அமைச்சரவை: ‘கிங்மேக்கர்கள்’ வைக்கும் கோரிக்கையால் சலசலப்பு