கடந்த 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்தியில் மீணடும் ஆட்சியைமப்பதற்காக மோடி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.


மீண்டும் பாஜக ஆட்சி: மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக கூட்டணி கட்சி தலைவர்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.


அதன் தொடர்ச்சியாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரதிட்டமிட்டனர். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முன்மொழிந்தார். அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிமொழிந்தார்.


என்.டி.ஏ கூட்டத்தில் நடந்தது என்ன? இதனை அடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி மோடி என கோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். பின்னர், நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 


இந்த கூட்டத்தில், மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மட்டும் இன்றி அக்கட்சி எம்பிக்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அதோடு, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.


கூட்டத்தில் பேசிய மோடி, "சிலர் உங்களை அணுகி உங்களுக்கு அமைச்சரவையில் இடம் தரப்போவதாக  சொல்வார்கள். இப்போது எனது கையெழுத்துடன் ஒரு பட்டியல் வெளிவரும் தொழில்நுட்பம் உள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை என்று நான் உங்களிடம் சொல்லி கொள்கிறேன்.


அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த சதிகளுக்கு இரையாகி விடக்கூடாது. I.N.D.I கூட்டணி இந்தத் தேர்தல்களில் போலிச் செய்திகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அதில் அவர்கள் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வதந்திகளில் இருந்து விலகி இருங்கள். பிரேக்கிங் நியூஸ் அடிப்படையில் நாடு இயங்காது" என்றார்.